வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (19/02/2018)

கடைசி தொடர்பு:22:22 (19/02/2018)

ஆட்சியாளர்கள் ஆதரவோடு அணையைச் சுரண்டி மணல் கொள்ளை - ஒரு நேரடி ரிப்போர்ட்!

கே.ஆர்.பி. அணையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி மாலை 4 மணிக்கு ஷட்டர் உடைந்து அணையிலிருந்த 1.40 டி.எம்.சி. தண்ணீர் வெளியேறி வீணாகக் கடலில் கலந்தது. தற்போது, உடைந்த ஷட்டரை அகற்றிவிட்டு 12 அடி உயரத்திற்கு மட்டும் புதிய ஷட்டரை தற்காலிகமாகப் பொருத்தி அணையில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டரைக் கண்காணிக்கத் தவறியதாகப் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பரமணியம், எஸ்.டி.ஒ. சாம்ராஜ் மற்றும் ஜெ.இ.கார்த்திகேயன் உள்ளிட்ட மூவரைத் தமிழக அரசு சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்தது.

கேஆர்பி அணையில் மணல் கொள்ளை

இப்போதாவது, கே.ஆர்.பி. அணையைக் கண்காணித்து முறையாகப் பராமரிக்கின்றார்களா என்று பார்வையிட அந்த அணைக்கு நேரடி விசிட் அடித்தோம். அணையின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு, தின்னகழனி என்ற கிராமத்தின் வழியாக அணையின் பின்புறம் சென்ற நமக்கு அந்தக் காட்சிகள் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. காரணம், சத்தமே இல்லாமல் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகளை அமைத்து ஃபில்டர் முறையில் மணலை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர்.  

கேஆர்பி அணையை சுரண்டி மணல் கொள்ளை

கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீருக்குள் இருக்கும் மண்ணை ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் தோண்டி எடுத்துக் குவியல் குவியலாக மண்ணைக் காய வைத்திருந்தனர். மறுபக்கம் காய வைத்திருந்த மண்ணில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து ஃபில்டர் மணலை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். இதற்காக, ஜே.சி.பி. இயந்திரங்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் மோட்டார்கள், இரண்டு யூனிட் அளவு கொண்ட 50-க்கும் மேற்பட்ட மினி லாரிகள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன. 

மணல்

ஃபில்டர் மணலை உற்பத்தி செய்துகொண்டிருந்த தொழிலாளர்களிடம் பேசினோம். மிகவும் அழுத்தமாகவே இருந்தனர் பலரும். அதில் ஒருவர், "நாங்க இந்த ஊர் கிடையாது. 30 கிலோமீட்டர் தொலைவிலிருந்து இங்க வேலைக்கு வர்றோம். இரண்டு யூனிட் அளவுள்ள ஒரு லோடு மணலை ஃபில்டர் செய்து கொடுத்தால் 700 ரூபாய் கிடைக்கும். 5 பேர் வேலை செய்தால்தான், ஒரு நாளைக்கு 4 முதல் 5 லோடு மணலைப் பிரித்து எடுக்க முடியும். வயித்து பிழைப்பு. வேறெந்த வேலையும் கிடைக்கல. அதனாலதான், இந்த வேலைக்கு வந்தோம்" என்றார்.

மணல் குவியல்

கே.ஆர்.பி. அணையையொட்டியுள்ள தின்னகழனி கிராம மக்களோ, "அதை ஏன் கேக்கறீங்க, இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒரு நாதியுமில்ல...எல்லோரிடமும் புகார் சொல்லியாச்சு. ஆனா, ஒருத்தரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க. இதனால் எங்க ஊர்ல குழந்தைங்க விளையாடக்கூட பொதுவெளிக்கு வர முடியல. மணல் வண்டிகள் வருவதும், போவதுமாக இருந்தால் எப்படிக் குழந்தைகளை வெளியே விடமுடியும்? எங்க ஊருக்கு ரோடு போட்டு, ரெண்டு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ள ரோடு இருக்கும் நிலைமையைப் பாருங்க. பாதி ரோடுதான் இருக்கு. மீறிக் கேட்டால் இந்த ஊர்ல வாழ முடியாது, இல்லாத பிரச்னைகளைக் கொண்டு வந்து பஞ்சாயத்து செய்வாங்க" என்று பிரச்னைகளைக் கண்டு பயந்து ஒதுங்குகின்றனர்.

மணல் கடத்தல் லாரி

"பொதுப்பணித்துறை, மீன்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் தினமும் கண்காணிக்கப்பட்டு வரும் கே.ஆர்.பி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை அமைத்து, ஃபில்டர் மணல் உற்பத்தி செய்வது, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரியாது என்பதெல்லாம் பொய். அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், மணல் கொள்ளை மூலம் மாதந்தோறும் 2.5 யூனிட் கொண்ட ஒரு மினி லாரிக்கு 40 ஆயிரம் வீதம், 50 மினி லாரிகளுக்கு மாமூல் கிடைப்பதால், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் எல்லாம் கே.ஆர்.பி. அணையைச் சுரண்டி நடைபெறும் மணல் கொள்ளையை வேடிக்கை பார்த்துகொண்டுள்ளனர்" என்று பொதுப்பணித்துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரி ஒருவர் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.


டிரெண்டிங் @ விகடன்