``ஐ.டி. பெண் ஊழியரின் தைரியம் மெய்சிலிர்க்க வைத்தது’’ - நேரில் ஆறுதல் கூறி நெகிழ்ந்த ஸ்டாலின் | DMK working president MK Stalin meets assaulted ap techie in chennai hospital

வெளியிடப்பட்ட நேரம்: 21:01 (19/02/2018)

கடைசி தொடர்பு:21:06 (19/02/2018)

``ஐ.டி. பெண் ஊழியரின் தைரியம் மெய்சிலிர்க்க வைத்தது’’ - நேரில் ஆறுதல் கூறி நெகிழ்ந்த ஸ்டாலின்

சென்னை தாழம்பூர் அருகே கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் இன்று (19.2.2018) நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த லாவண்யா பணியாற்றி வந்தார். அலுவலகத்திலிருந்து கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நிகிதாவை, அரசன்கழனி காரணை சாலையில் கொள்ளையர்கள் வழிமறித்து தாக்கினர். மேலும், அவரிடமிருந்த செல்போன், செயின் உள்ளிட்டவையைப் பறித்துச் சென்றனர். கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த நிகிதா, சென்னைப் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த லோகேஷ், நாராயணமூர்த்தி, விநாயகமூர்த்தி ஆகிய 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர். 

இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவை, தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ``கொள்ளையர்களின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி.பெண் ஊழியர் லாவண்யாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அவருக்கு ஆறுதல் கூறினேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் தன்னந்தனியாக கொள்ளையர்களுடன் அவர் தைரியமாகப் போராடியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

அதேபோல், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நேரில் சந்தித்து லாவண்யாவிற்கு ஆறுதல் கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களுக்கு விரைவில் உரிய தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். லாவண்யாவை, சென்னை மாநகரக் காவல் ஆணையர் விஸ்வநாதன் நேற்று (18.2.2018) நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், விரைவில் குணமடைய வேண்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.