``தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!’’ - காப்பாற்றிய போலீஸார்

நிலம் வாங்க ரூ.30 லட்சம் பணம் கட்டி ஏமாந்த பெண் ஒருவர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சரியான சமயத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீஸார் தடுத்து நிறுத்தியதால், அவர் காப்பாற்றப்பட்டார். 

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பாலம்மாள்

திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலஆத்தூர் அருணாபுரத்தை சார்ந்த செல்லப்பாவும் அவரது மனைவி பாலம்மாள் இருவரும் தூத்துக்குடி ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் பாலம்மாள் யாரும் எதிர்பாராத வகையில் பையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ஓடி வந்து தடுத்ததால், விபரீதம் தடுத்து நிறுத்தப்பட்டது. 

இதுகுறித்து விசாரிப்பதற்காக பாலம்மாளை சிப்காட் காவல்நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.  விசாரணையில் மேலஆத்தூர் அருணாபுரத்தை சேர்ந்த ராணி என்பவர், பாலாம்மாளிடம்  இடம் வாங்கித் தருவதாகக் கூறி சிறிது சிறிதாக மொத்தம் ரூபாய் 30 லட்சம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.  பணத்தைத் தருமாறு திருப்பி கேட்டதற்கு ராணி மறுத்ததாகவும், இதுகுறித்து ஆத்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மனவேதனை அடைந்ததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதாக அவர் கூறி உள்ளார். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!