ஆந்திராவில் இறந்த 5 தமிழர்கள்!- உடலை வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் | 5 Tamils who died in Andhra Pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (20/02/2018)

கடைசி தொடர்பு:01:30 (20/02/2018)

ஆந்திராவில் இறந்த 5 தமிழர்கள்!- உடலை வாங்கக்கூட பணம் இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்

ஆந்திரா மாநிலம் கடப்பா வனப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை ஒன்டிமெட்டா என்ற ஏரியில் உயிரிழந்த நிலையில் 5 உடல்கள் மிதந்து கொண்டிருந்தது. அதை ஆந்திர காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடப்பாவில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஐந்து உடல்களும் செம்மரம் கடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்திருப்பதாக கர்னூல் டி.ஐ.ஜி., ஶ்ரீனிவாசலு தெரிவித்துள்ளார்.

இறந்த ஐந்து பேரும் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கண்டாறியப்பட்டுள்ளது. 1. முருகேசன், 2.ஜெயராஜ், 3.முருகேசன், 4.கருப்பண்ணன், 5. சின்னப்பையன். அனைவரும் கல்வியறிவு அற்ற மலைவாழ் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் விவரம்:

1. முருகேசன் வயது 42. மனைவி பெயர் உண்ணாமலை. இவர்களுக்கு பழனியம்மாள், மீனா, ரோஜா என்ற 3 மகள்கள் இருக்கிறார்கள். இவர்கள் கருமந்துறை அடியனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

2. ஜெயராஜ் வயது 25. மனைவி பெயர் கரியா. இவர்களுக்கு வனிதா என்ற 3 வயது மகளும், தினேஷ் என்ற 5 மாத கைக்குழந்தையும் இருக்கிறது. இவர்கள் கருமந்துறை கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
3. முருகேசன் வயது 42. மனைவி பெயர் பழனியம்மாள். இவர்களுக்கு மணிகண்டன், அசோக், ஐஸ்வர்யா என்ற 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.  இவர்கள் கருமந்துறை கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
4. கருப்பண்ணன் வயது 23. திருமணம் ஆகாதவர். அப்பா பெயர் பொன்னுசாமி, அம்மா பெயர்  பார்வதி.  இவர் கூட பிறந்த சகோதரிகள் செல்வி, மணி. இவர்கள் கருமந்துறை கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
5. சின்னப்பையன் வயது 45. மனைவி கண்ணம்மாள். இவர்களுக்கு ஏழு வயதில் சந்தோஷ், ஐந்து வயதில் சதீஷ், மூன்று வயதில் சிவனேஷன். என்ற 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் கருமந்துறை கிராங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த 5 பேரின் மரணத்தால் அந்தக் கிராமங்களே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இறந்தவரின் உடலை ஆந்திராவிற்கு சென்று வாங்குவதற்கு கூட பண வசதியும், படிப்பறிவு இன்மையாலும் அடக்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறார்கள்.