படகு கவிழ்ந்து உயிர் தப்பிய இலங்கை மீனவரை தாயகத்திற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை!

இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள இலங்கை மீனவரை விடுவித்து இலங்கைக்கு அனுப்பி வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கடலில் நடந்த விபத்தில் உயிர் பிழைத்த இலங்கை மீனவர்.

பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விசாரணைக்கு பின் நீதிமன்றத்தின் மூலம் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் 130-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில்  இருந்த 109 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. 

கடந்த டிசம்பர் மாதம் இலங்கை மன்னார் முருகன் கோயில் 7-ம் வட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மரியதாஸ், அன்றன் ஆகிய இருவரும் மீன்பிடிக்க சென்றபோது படகு கவிழ்ந்தது. இதில் அன்றன் கடலில் மூழ்கி காணாமல் போக, கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர் மரியதாஸை ராமேஸ்வரம் மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மரியதாஸை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மீனவர் மரியதாஸை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில் கடந்த 2 மாதங்களாக அதற்கான முயற்சியினை போலீஸார் எடுக்கவில்லை.

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசித்து வரும் சகோதரி வீட்டில் மரியதாஸ் தங்கியுள்ளார் இந்நிலையில், தனது குடும்பத்தினர் இலங்கையில் வருவாய் இன்றி வசித்து வருவதால் தன்னை விரைவாக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி  இந்திய - இலங்கை நிரபராதி மீனவர் கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!