அரசு மருத்துவமனையில் இருக்கும் பேய்களை விரட்ட மருத்துவ யாகம்! -விசித்திர போராட்ட அறிவிப்பு | Fairytale protest announcement

வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:54 (20/02/2018)

அரசு மருத்துவமனையில் இருக்கும் பேய்களை விரட்ட மருத்துவ யாகம்! -விசித்திர போராட்ட அறிவிப்பு

'ராணி மகப்பேறு மருத்துவமனை, முத்துலெட்சுமி ரெட்டியார் அரசு பொது மருத்துவமனை ஆகியவற்றில் குடியிருக்கும் பேய்களை விரட்ட, மருத்துவ யாகம் நடத்தப்போகிறோம்' என்று புதுக்கோட்டை நகரெங்கும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அந்த வித்தியாசமான போஸ்டரால், மக்கள் மத்தியில் பரபரப்பு பேயாய் பற்றிக்கொண்டுவிட்டது.


சினிமா, சீரியல் போன்றவற்றை ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் பேய்கள், பிசாசுகள் சீசன், இப்போது அரசியல் கட்சிகள், அமைப்புகள் அறிவிக்கும் போராட்டங்களிலும் புகுந்துவிட்டது. அவற்றைப் புகுத்திய பெருமை அ.தி.மு.க-வினரையே சாரும். கொஞ்ச நாள்களுக்கு முன்னதாக, 'அம்மாவின் ஆன்மா' 'அம்மாவின் ஆவி' என்ற சொல்லாடல்கள் மூலமாக பீதியூட்டினார்கள். அந்தப் பீதி இப்போது அரசியல் சார்ந்து இயங்கும் சிறு அமைப்புகள் வரை பாய்ந்துவிட்டது. 

'தமிழக ஜனநாயகக் கட்சி'என்ற அமைப்பின் சார்பில் 'விரைவில்'என்ற கொட்டை எழுத்துடன் அறிவித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் மேற்படி பேய்விரட்டுதல், மருத்துவ யாகம் போன்ற வாசகங்கள் கவனத்தை ஈர்த்தன. இதில் அதிக கவனத்தை ஈர்த்தது, 'மருத்துவ யாகம்' என்பதுதான். அஸ்வமேத யாகம், கோமாதா யாகம், தன்வசிய யாகம் உள்ளிட்ட ஏகப்பட்ட யாகங்கள் இருப்பதும், அவை நடைமுறையில்  இருப்பதும் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஆனால், இந்த' மருத்துவ யாகம்' புதிதாக இருக்கிறதே என்று கருதி, அந்த அமைப்பின் தலைவர்,ஷெரீஃப்பை தொடர்புகொண்டு பேசினோம். ஒரு சம்பவத்தோடு விவரித்தார்.

சில நாள்களுக்கு முன்பு, இரவு 12மணி இருக்கும், ஒரு பாட்டி தன் பேரனுக்கு ரொம்ப முடியவில்லை என்று முத்து லெட்சுமி  மருத்துவமனையில் முன்னால் நின்று,' எப்படியாவது என் பேரனை காப்பாத்துங்க' என்று தனியாக கதறிக் கொண்டு இருந்தார். நான் அந்தப் பாட்டியிடம்," பாட்டி புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை கட்டிடம் மட்டும்தான் இருக்கு. ஆனால்,மருத்துவம் பார்க்க முடியாது. ஏழு கிலோ மீட்டர் தொலைவில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவமனைக்குத்தான் நீங்கள்போகவேண்டும்"என்றேன் அதற்கு அந்தப்பாட்டி," அங்கு போக எங்கே பஸ் ஏறுவது என்று கேட்டார்.' பஸ் இந்த நேரத்தில் கிடையாது. காலையில்தான் வரும்"என்றேன். அதற்கு அந்தப் பாட்டி, "ஐயோ, வந்த ஆட்டோவையும் விட்டு விட்டேன். கையில்  100 ரூபாய்தான் இருக்கு. ஆட்டோகாரரோ 300ரூபாய் கேட்பாரே"என்று பதறினார். அந்த நேரத்தில் அந்தப்பாட்டியை பேரனுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். இப்படி தினமும் பரிதவிக்கும் மக்களுக்காக மீண்டும் அரசு மருத்துவமனை இங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,எங்கள் கட்சியின் சார்பாக மார்ச் 3-ம் தேதி முற்றுகை போராட்டம் நடத்த இருக்கிறோம். ராணி மகப்பேறு மருத்துவமனைக்குள் சமூக விரோதிகள் குடிப்பதும் சீட்டாடுவதுமான செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்களைத்தான்  பேய்கள் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்தோம். இன்றைக்கு ஆர்ப்பாட்டம்.. போராட்டம் என்று வெறுமனே போஸ்டர் அடித்து ஒட்டினால், பொதுமக்கள் கவனிப்பதில்லை. அவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் மருத்துவ யாகம் என்ற வார்த்தையை போட்டோம். நாங்கள் நடத்த இருக்கும் முற்றுகைப் போராட்டம்தான் அந்த மருத்துவ யாகம்"என்றார் ஷெரீப்.