ராமேஸ்வரம் கோயில் பிராகாரத்தில் இயங்கிவந்த 44 கடைகள் அகற்றம்!

 மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து எதிரொலியாக,  நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ராமேஸ்வரம் கோயில் பிராகாரத்தில் இருந்துவந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

ராமேஸ்வரம் கோயில் பிரகாரத்தில் மூடப்பட்ட கடைகள்

கடந்த 2-ம் தேதி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், தொன்மையான வீர வசந்தராயர் மண்டபம் இடிந்துவிழுந்தது. 7,000 சதுர அடி பரப்பளவுக்கு சேதமடைந்தது. இது, தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்துக்கு அடிப்படைக் காரணமாகச் சொல்லப்படும் கோயிலுக்குள்ளே அமைந்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளைக் காலிசெய்ய வேண்டுமென்று அனைவரும் கூறிவரும் நிலையில்,  தங்களுக்கு மாற்று இடம் தருவதாக உறுதி அளித்தால்தான் காலிசெய்வோம் என்று பேச்சுவார்த்தையில் கடைக்காரர்கள் கூறிவந்தனர். கடந்த 7-ம் தேதி மதியத்துக்குள் கடைகளை அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் பாதுகாப்பு கருதி, கோயில் பிராகாரங்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை உத்தரவிட்டது. ராமாயணத் தொடர்புடைய கோயிலான ராமேஸ்வரம் கோயில் பிராகாரத்திலும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் இருந்து வருகின்றன. இந்தக் கடைகளை கோயிலின் பாதுகாப்புக் கருதி ஒரு வார காலத்திற்குள் அகற்ற வேண்டும் என வியாபாரிகளுக்கு கோயில் நிர்வாகம், கடந்த வாரம் நோட்டீஸ் கொடுத்திருந்தது.

 அதன்படி ராமேஸ்வரம் கோயிலின் மேற்கு கோபுர வாயில் மற்றும் மூன்றாம் பிராகாரத்தின் மேற்குப் பகுதியிலும் இருந்த 44 கடைகள் இன்று (19-02-18) மாலை மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைகளைக் காலிசெய்யும் பணிகளில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!