வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (20/02/2018)

கடைசி தொடர்பு:10:43 (20/02/2018)

ஆதார் இருந்தால்தான் அட்மிட்! மனைவியை இழந்த 70 வயது முதியவருக்கு நடந்த வேதனை

உடல் நலிந்து, ஆதரவற்ற நிலையில் இருந்த பெரியவர் மேஸ்திரி முத்துவை மீட்டு, அவரை காப்பகத்தில் சேர்த்திருக்கிறார்கள், அன்பு மனம்கொண்ட அன்பர்கள் சிலர். இவர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கிய 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மேஸ்திரி முத்து


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி என்ற ஊரில், நாட்டுக்கோட்டை நகரத்தார் மண்டபம் பகுதியில், ரோட்டின் ஓரத்தில் பெரியவர் ஒருவர்  ஆதரவற்றுக்கிடந்தார். அவர் பெயர், 'மேஸ்திரி முத்து'. அடர்ந்து நரைத்த தலைமுடியும் தாடியும், மெலிந்த உடலுமாக பார்ப்பதற்கே கண்கள் தயங்கும் தோற்றத்தில் கிடந்த அவரை, அதே ஊரில் வசிக்கும் அவரது குடும்பத்தார் ஒதுக்கி வைத்துவிட்டனர். காரணம் அதே ஊரில் வசித்து வந்த மேஸ்திரி முத்துவின்  தங்கை மகன் பழனிச்சாமி சுமைதூக்கும் தொழிலாளி. அதனால், மேஸ்திரி முத்துவை கவனிக்க இயலாமல்போய்விட்டது.


தனது குடும்பத்தினரால் பல்வேறு சூழ்நிலைகளால் நிந்திக்கப்பட்டு ரோட்டோரம் தள்ளப்பட்டார் முத்து. ஆனாலும் அவரை அடையாளம் கண்டுக்கொண்ட   காரையூர் காவல் நிலைய எழுத்தர் விமலா மற்றும் அக்கம்பக்கத்தினர், அவருக்கு தினந்தோறும் உணவு கொடுத்து பாதுகாத்துவந்தனர். இப்படியே இரண்டு வருடங்களாக அந்த ரோட்டோரத்தில் கிடந்த முத்து குறித்துத் தகவல் அறிந்து வந்த 'மக்கள் பாதை'அமைப்பினர் அவரை மீட்டு, அவருக்கு முடிதிருத்தி, தாடி மழித்து, குளிப்பாட்டி, புது ஆடைகள் அணிவித்து, சிகிச்சைக்காக வலையப்பட்டி ஜி.ஹெச்சில் சேர்த்திருக்கிறார்கள்.

யார் இந்த முத்து? வலையப்பட்டி, பொன்னமராவதி உள்ளிட்ட பல ஊர்களில் பெயர்பெற்ற சமையல் மேஸ்திரி இவர். இவருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. இவரது மனைவி பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். பிள்ளைகளும் இல்லை. இந்தச் சூழலில்தான் தன் சொந்த வீட்டுக்கருகிலேயே தெருவில் கிடந்திருக்கிறார். தற்போது, முத்துவுக்கு 70 வயது.

மக்கள் பாதை அமைப்பினர்


இந்நிலையில், வெயிலைத்  தாங்க மாட்டார் என 'மக்கள் பாதை' நிர்வாகிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள், வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச்சென்று மருத்துவர் சதாசிவம், சரவணன் ஆகியோர் தலைமையில் அவருக்கு சிறப்பு முதலுதவி மற்றும் பொது சிகிச்சை செய்தனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய 'மக்கள் பாதை'அமைப்பைச் சேர்ந்த இளையராஜா, பெரியவர் முத்துவை தனியார் அல்லது அரசு காப்பகத்தில் சேர்க்க எண்ணியுள்ள நிலையில், அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எல்லா காப்பக நிர்வாகிகம், முத்துவுக்கு ஆதார் கார்டு இருந்தால்தான் சேர்ப்போம் என்று கூறிவிட்டார்கள். முத்துவிடம்  ஆதார் இல்லை. ஒரு ஆதரவற்ற மனிதர் மூச்சு விடவும் ஆதார் கார்டு வேணும்னு கேட்பது நியாயமா? இதே கேள்வியை இன்று பொன்னமராவதியில் நடக்க இருக்கும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில், அரசு அதிகாரிகளிடம் கேட்க இருக்கிறோம். அப்போது, முத்துவையும் முகாமுக்கு தூக்கிச்செல்ல இருக்கிறோம்' என்றார்.