வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (20/02/2018)

கடைசி தொடர்பு:12:55 (20/02/2018)

இறப்பைத் தடுக்க வந்துவிட்டது டூவீலர் ஆம்புலன்ஸ்! திண்டுக்கல் அரசு மருத்துவமனை அசத்தல்

Two weller ambulence

விபத்து, திடீரென ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை நடைமுறையில் உள்ளது. இந்தச் சேவை, வேன் மூலமாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. பல நேரங்களில், நோயாளிகள் இருக்கும் குறுகலான சாலை, சந்து, சீரற்ற பாதைகளில் இந்த வேன் செல்ல முடிவதில்லை. இந்நிலையில், வேன் செல்ல முடியாத இடங்களுக்கும் சென்று அவசர சிகிச்சை அளிப்பதற்காக சைரன் டூவீலர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள், 108 ஆம்புலன்ஸைத் தொடர்புகொண்டாலும், நோயாளிகளை அடைவதற்குள் முதலுதவி கிடைக்காமல் சில நேரங்களில் இறப்பு ஏற்பட்டு விடுகிறது. இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்கும் வகையில்தான் டூவிலர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலுதவி சிகிச்சை அளிக்கத் தெரிந்த மருத்துவ உதவியாளர்கள் இந்த வாகனத்தை இயக்குவார்கள். இந்த டூவிலர் ஆம்புலன்ஸ் வசதி திண்டுக்கல்லில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

Two weller ambulence

பீஸா வாகனம்போல இருக்கும் டூவீலர் ஆம்புலன்ஸில், பின்பக்கம் ஒரு பெட்டி உள்ளது. இதில், முதலுதவிக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர், ஊசிகள், உயிர்காக்கும் மருந்து உள்ளிட்ட 54 வகையான மருந்துகள் இடம்பெற்றுள்ளன. ஆம்புலன்ஸ் போல இதிலும் சைரன் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் சுலபமாகக் கடந்துசெல்ல முடிகிறது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இதன் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்காக 108-க்கு போன் செய்தவுடன், இந்த டூவீலர் ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்படும். போக்குவரத்து நெரிசல், குறுகிய சாலைகள் ஆகிய இடங்களை சுலபமாகக் கடந்து, இந்த வாகனம் உடனடியாக நோயாளிகளின் வீட்டுக்குச் செல்லும். இந்த வாகனத்தை இயக்குபவரே முதலுதவி செய்துவிடுவார். கோல்டன் ஹவர் எனப்படும் முக்கியமான நிமிடங்களில், தேவையான முதலுதவி கிடைக்காமல்தான் பலர் இறந்துவிடுகிறார்கள். அந்த இறப்பை டூவிலர் ஆம்புலன்ஸ் தடுக்கும். முதலில் செல்லும் டூவிலர் ஆம்புலன்ஸ் தேவையான முதலுதவிகளைக் கொடுத்து முடிப்பதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிடும். அதன்பிறகு, அருகில் உள்ள மருத்துவமனையில் நோயாளிகள் சேர்க்கப்படுவார்கள். தற்போது இந்த டூவீலர் ஆம்புலன்ஸ் சேவை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி மட்டுமே இருக்கும். தேவையின் அடிப்படையில் மேலும் கூடுதல் வாகனங்கள் மற்றும் கூடுதல் நேரம் இயக்க முடிவுசெய்யப்படும் எனத் தெரிகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க