`நாங்கதான் ஆளணும்' - ரஜினி குறித்த கேள்விக்கு கமல் முன்பு அதிர்ந்த சீமான்

seeman, kamal

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்தித்துப் பேசினார்.  சந்திப்புக்குப் பின் கமல்ஹாசனுடன் இணைந்து சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய சீமான், ‘நான் சிறு வயதில் இருந்தே கமலில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்து வளர்ந்தவன். ஒரே ஊர். ஒரே மண்ணில் பிறந்தவர்கள். எங்கள் குடும்பங்களுக்கு கமலின் குடும்பம்தான் வழக்கறிஞராக இருந்து பல வழக்குகளை நடத்தியது. 

தமிழகத்தில் தற்போது மிக மோசமான அரசியல் சூழல் நிலவி வருகிறது. எப்படியாவது மாற்றம் வந்துவிடாதா என்றுதான் அனைவரும் எதிர்பார்கிறோம். இந்தச் சூழலில் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் கலைஞன் என் அண்ணன் கமல்ஹாசன் நாளை அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். எனவே, அவரை சந்திக்க நான் வந்திருக்கிறேன். நான் நேற்று உருவான தலைவர். எனவே, அவர் வந்து என்னை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால்தான் நான் வந்து அவரைச்  சந்தித்தேன். அவரின் அரசியல் பயணம் வெற்றிபெற வாழ்த்துகிறேன். ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கும் அவரின் பயணம் புரட்சிகர, வெற்றிகர அரசியல் பயணமாக அமைய வாழ்த்துகிறேன்’ என்றார்.

சீமான் பேசிக்கொண்டிருந்தபோது இடைமறித்த செய்தியாளர், ‘கமலுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா’ என்றார். சீமான் பதில் கூறுவதற்கு முன்னரே கமல், ‘நான் பதில் சொல்லலாமா’ என்று பேசத் தொடங்கினார்..

‘சீமானுக்கு என் அரசியல் கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால், என்னை அவருக்குத் தெரியும். நான் நடிக்கும் சினிமா பற்றிதான் அவருக்குத் தெரியும். என் கொள்கை என்ன என்பது அரசல்புரசலாக நான் பேசும்போது தென்படும் வார்த்தைகளை வைத்து தெரிந்து கொண்டிருப்பார். முழுமையாகத் தெரிந்திருக்க வாய்பில்லை. நாளை தொடங்கப்போகும் என் பயணத்தைக் கவனித்துவிட்டு என் கொள்கை என்ன என்பதைத் தெரிந்துகொண்டு சீமான் அவரது முடிவை கூறட்டும்’ என்றார். 

சீமான் , கமல்
 

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த சீமான், ``இது எங்க மண். உதாரணத்துக்கு பொள்ளாச்சி என்பதை புத்தகத்தில் படித்திருப்பார்கள். ஆனால், அங்கு நேரில் சென்று பார்க்க வேண்டும். நெசவாளர் பிரச்னை, உழவர் பிரச்னை என எல்லாமே நேரில் சென்று பார்த்தால்தான் உணர முடியும். மேலும், மீனவர் பிரச்னை என்ன, மாணவர் பிரச்னை என்ன என்பது நேரில் சென்று பார்த்தால்தானே தெரியும்’' என்றார். 

மேலும் பேசிய சீமான் ``தமிழ் வாழணும் என்றால், தமிழன் ஆளணும். அதை தவிர்க்க முடியாது. இது என் வீடு. என் வீட்டில் எங்கே குழாய் உடைந்திருக்கிறது என்று எனக்குதான் தெரியும். எங்கே தண்ணீர் கசிகிறது, எங்கே என்ன பிரச்னை என்று எனக்குதான் தெரியும். எங்கள் மண்ணை நாங்கள்தான் ஆள வேண்டும்'' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!