`வரியை ரத்து செய்க' - புதுச்சேரி, காரைக்காலில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்

புதுச்சேரி மாநில நகராட்சிகளில் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்காலில் கடையடைப்புப் போராட்டம் நடந்துவருகிறது.

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளில் தொழில் உரிம வரி, தொழில் வரி, வணிக வளாக வரி, குப்பை வரி உள்ளிட்டவை திடீரென உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கூட்டமைப்பு இன்று கடையடைப்புப் போராட்டத்துக்கு  அழைப்பு விடுத்திருந்தார்கள். இந்நிலையில், புதுச்சேரி நகராட்சிக்கு மட்டும் உயர்த்தப்பட்ட வரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத வணிகர் கூட்டமைப்பு, மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களிலும் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்துசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று முழு கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கடையடைப்பு

அதையடுத்து, இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுவதையொட்டி புதுச்சேரியில் உள்ள பெரிய அங்காடி, நேரு வீதி, குபேர் அங்காடி, ரெங்கபிள்ளை வீதி, முத்தியால்பேட்டை அங்காடி, அண்ணா சாலை மற்றும் காமராஜர் வீதி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிகர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மீன் அங்காடிகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல திரையரங்குகளில் பகல் காட்சி ரத்துசெய்யப்பட்டுள்ளது. மேலும், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் அங்காடிகளும் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!