வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (20/02/2018)

கடைசி தொடர்பு:13:10 (20/02/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிப்பட்டம் யானைமீது ஊர்வலமாக ரதவீதிகள் வழியாக எடுத்து வரப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 1-ம் தேதி நடக்கிறது

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல திருவிழாக்கள் நடந்து வருகின்றன. இதில் மாசிப் பெருந்திருவிழா மிக முக்கியத் திருவிழாவாகும். இந்த ஆண்டு மாசித் திருவிழா இன்று (20.02.18) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.  1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது, தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் கும்ப லக்கனத்தில் கொடிமரத்தில் பக்தர்களின் ”அரோகரா” கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டுக் கொடிப்பட்டம் யானைமீது ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்

வரும் 24-ம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. 26-ம் தேதி ஏழாம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அதனைத் தொடர்ந்து 9  மணிக்கு மேல் ஆறுமுகநயினார், வெற்றி வோ் சப்பரத்திலும்,  மாலை 4.30 மணிக்கு மேல் சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில்  சிவப்பு சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்

27ம் தேதி எட்டாம் திருவிழாவைக் காலை 11.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.  மார்ச் 1-ம் தேதி 10-ம் திருவிழா அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. மார்ச் 2-ம் தேதி பதினொன்றாம் திருவிழாவை முன்னிட்டு இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது.  மார்ச் 3-ம் தேதி 12-ம் நாள் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்

திருவிழாவை முன்னிட்டு வரும் 20 மற்றும்  26 ஆகிய  தேதிகளில்  அதிகாலை 1 மணிக்கும், 21, 23 மற்றும்  24-ம் தேதிகளில் அதிகாலை 4 மணிக்கும் நடை திறக்கப்படுகிறது. திருவிழாவின் மற்ற நாள்களில் கோயில் நடை  அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க