வனத்துறை அதிகாரிகளுக்கு எதிராகப் பந்த்! ஸ்தம்பித்தது கொடைக்கானல்

வனத்துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கொடைக்கானலில் இன்று பந்த் நடைபெற்றுவருகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்தால் கொடைக்கானல் ஸ்தம்பித்துப்போனது.

கொடைக்கானல் பந்த்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், சுற்றுலா சென்ற தனியார் விடுதி ஊழியர்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, விசாரணைக்காக சிலரை அழைத்துச்சென்ற வனத்துறையினர், அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்து, கடுமையாகத் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சுற்றுலா சென்ற இடத்தில் டான்ஸ் ஆடிய குற்றத்துக்காக 75 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதித்ததோடு, கை, கால் எலும்பு முறியும் அளவுக்கு கடுமையாகத் தாக்கிய சம்பவம், கொடைக்கானலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வனத்துறையினரின் தாக்குதலுக்கு ஆளான இரண்டு பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உள்ளூர் மக்கள், வனத்துறையினர்மீது கடும் அதிருப்தி அடைந்தனர். சுற்றுலாப் பயணிகளைத் தாக்கிய வனத்துறை ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வணிகர்கள், டாக்சி ஓட்டுநர்கள் சங்கம், அரசியல் கட்சிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. வனத்துறையைக் கண்டித்து போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. இன்று, கொடைக்கானலில் முழுமையான கடையடைப்பு நடைபெறும் என போராட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரச்னை தீவிரமாவதை உணர்ந்த வனத்துறை, விடுதி ஊழியர்களைத் தாக்கிய வனச்சரக வனவர் டேவிட், வனக் காப்பாளர் சிங்காரவேலன் ஆகியோரை பணியிடமாற்றம் செய்தும், தற்காலிக சூழல் காவலர்களான அந்தோணி பெர்னாண்டோ, விக்னேஷ்வரன், சுரேஷ் ஆகிய மூன்று பேரையும் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

கொடைக்கானல் பந்த் 

வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாத போராட்டக்குழுவினர், தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து வனத்துறையினர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். ஏற்கெனவே அறிவித்தபடி இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கொடைக்கானல் பந்த் 

அதைத் தொடர்ந்து, இன்று காலை ஏரிச்சாலை கலையரங்கம் அருகே கூடிய அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள், வாடகை வாகனம் ஓட்டுநர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். வனத்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர். கொடைக்கானல் நகரின் முக்கிய பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் மூஞ்சிக்கல் பகுதியை அடைந்ததும், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இன்று காலை முதல் கொடைக்கானல் பதற்றமாக இருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!