வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (20/02/2018)

கடைசி தொடர்பு:13:18 (20/02/2018)

அலங்காநல்லூரில் தொலைந்த கறுப்பனைக் கண்டுபிடித்த வாட்ஸ்அப்! நெகிழ்ந்த மாலத்தீவு இளைஞர்

ஊரில் தான் ஆசையாக, பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை கறுப்பனைக் காணவில்லை என்று மாலத்தீவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் வாட்ஸ்அப்பில் பதிவு செய்த தகவல் மூலமாக இரண்டே நாள்களில் அவரின் `கறுப்பன்' கிடைத்துவிட்டான்.

 

கறுப்பன்

 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள நொடியூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் பி.கே.கார்த்திக். இவர் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதிலும் போட்டிகள் எங்கு நடந்தாலும் அதில் கலந்துகொண்டு, தன் காளைகளை அவிழ்த்து விடுவதிலும் அதீத ஆர்வம் கொண்டவர். கடந்த இரண்டு வருடங்களாக மாலத்தீவில் வேலை பார்த்துவரும் இவர், அங்கிருந்தபடியே தன் காளைகளை ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கிறார். இவரிடம் தற்போது ஆறு காளைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கறுப்பன். பெயருக்கேற்றபடி முழுக்க முழுக்க அடர்ந்த கறுப்பு நிறத்தைக் கொண்ட துள்ளலான காளை அது. அலங்காநல்லூரைச் சேர்ந்த இந்தக் கறுப்பனைப் பற்றிக் கேள்விப்பட்டு, சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார் கார்த்திக். 

கடந்த 17-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், மழையூரில் நடந்த ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்ட கறுப்பன் யாருக்கும் பிடிபடாதமாலத்தீவு இளைஞர் காளையாகச் சீறிப் பாய்ந்திருக்கிறது. அதனை வீடியோ எடுத்த கார்த்திக் நண்பர்கள் அதனைச் சுடச் சுட மாலத்தீவில் இருக்கும் கார்த்திக்குக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்கள். வாடிவாசலிலிருந்து நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்த கறுப்பன் அதன்பிறகு  கண்ணில் படவே இல்லை. கறுப்பனை ஓட்டிவந்த கார்த்தியின் அப்பாவும் நண்பர்களும் தேடிப் பார்த்து சோர்ந்துவிட்டனர். கருப்பன் காணவில்லை என்ற தகவலைக் கார்த்தியிடமும் கூறினார்கள். இயல்பாகவே ஜல்லிக்கட்டு காளைகள் மீது பிரியம்கொண்ட கார்த்தி, உடனடியாக, வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் கறுப்பன் படத்துடன் தொடர்பு நம்பர்களுடன் 'கறுப்பன் காளையைக் காணவில்லை'என்று தகவலைப் பதிவிட்டுக் காத்திருந்தார். அதன்பிறகு என்ன நடந்தது என்பதை அறிய மாலத்தீவில் இருக்கும் கார்த்திக்கைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

அவரே அந்தப் படபடப்பான நாள்களைப் பற்றி விவரிக்கிறார். கேளுங்கள். " கறுப்பன் செம காளைங்க. எங்க வீட்டுக்கு வந்த கொஞ்ச நாள்களிலேயே எல்லாருகிட்டேயும் ஒட்டிகிச்சு. போட்டியில அவமானம் தேடித்தராத காளை. அதைக் காணோம்னு சொன்னதும் அன்னிக்கு எனக்கு சோறு தண்ணியே இறங்கலே. வாட்ஸ்அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் தகவலைப் போட்டுட்டுக் காத்துக் கெடந்தேன். அப்பப்ப அப்பாவுக்கும் ஊரில் உள்ள நண்பர்களுக்கும் போனை போட்டுக் கேட்டுக்குவேன். 18-ம் தேதி இரவு நான் வாட்ஸ்அப்பில் கொடுத்த நம்பரைப் பார்த்துட்டு, தீத்தானிப்பட்டியிலிருந்து ஒருத்தர் போன் பண்ணிணாரு. திக்கு திசை தெரியாமல் திரிஞ்சுகிட்டிருந்த கறுப்பனைப் பிடிச்சு, தொழுவத்தில் கட்டி வைத்திருப்பதாகவும் வந்து ஓட்டிக்கொண்டு போகும்படியும் சொன்னார். மறுநாளே, அப்பாவும் என்னோட நண்பர்களும்  தீத்தானிப்பட்டிக்கு நேரில் சென்று கருப்பனை ஓட்டி வந்தார்கள்" என்றவர் இறுதியாக, இன்னும் ஆறு மாதங்கள் வரைதான் மாலத்தீவில் இருப்பேன். அதன்பிறகு, ஊருக்குச் சென்று முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் போட்டிகளுக்கு ஓட்டிச் செல்லும் வேலைகளைப் பார்க்கப் போகிறேன்" என்றார் கண்களில் ஆர்வம் பொங்க.