`பிரதமராகத் தொடர மோடிக்குத் தகுதி இல்லை!' - சித்தராமையா ஆவேசம் | Narendra Modi unfit to continue as PM: Siddaramaiah

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (20/02/2018)

கடைசி தொடர்பு:16:40 (20/02/2018)

`பிரதமராகத் தொடர மோடிக்குத் தகுதி இல்லை!' - சித்தராமையா ஆவேசம்

நாட்டின் பிரதமராகத் தொடர மோடிக்குத் தகுதி இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விமர்சித்துள்ளார். 

சித்தராமையா


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பா.ஜ.க-வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற பா.ஜ.க தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சித்தராமையா தலைமையிலான மாநில அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார். ``கர்நாடக அரசு ஊழல் செய்வதில் உலகச் சாதனை படைத்துள்ளது. அரசின் ஊழல்கள் ஒவ்வொன்றாகத் தினசரி வெளிவந்துகொண்டிருக்கின்றன. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்’’ என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். 

இந்தநிலையில், பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதிலடி கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, ``நாட்டின் பிரதமர் போலவே மோடி நடந்துகொள்ளவில்லை. நாட்டின் முன்னேற்றம் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. ஆனால், அதைப்பற்றியெல்லாம் பிரதமர் மோடி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அரசியல் லாபத்துக்காகப் பொறுப்பற்ற முறையில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். பிரதமர் பதவியில் தொடர மோடிக்குத் தகுதி இல்லை’’ என்று காட்டமாகப் பதிலளித்தார்.