வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (20/02/2018)

கடைசி தொடர்பு:18:15 (20/02/2018)

தமிழக மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைப்பு!

இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் இந்தியச் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று பரஸ்பரம் இருநாட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 மீனவர்கள் படகுகள்
 

பாக் நீரிணை பகுதியில் உள்ள பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் சென்றபோது  கடந்த இரு மாதங்களில் மட்டும் 130-க்கும் மேற்பட்ட  தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்ற விசாரணைக்குப் பின் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களில் 109 பேரை இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினர் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ராணி துர்காவதி மற்றும் அதித்தயா ஆகிய கப்பல்களில் காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

இதேபோல கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கடலோரக் காவல் படையால் இந்தியக் கடல் பகுதியில் சிறைபிடிக்கப்பட்டு தமிழகச் சிறையில் இருந்து வந்த இலங்கை மீனவர் 6 பேர்களையும் இலங்கை கடற்படையிடம் இந்தியக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இலங்கை கடற்படையினர் மூலம் இந்தியக் கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 109 மீனவர்கள் இன்று மாலை காரைக்கால் துறைமுகம் வந்தடைவார்கள். அதன் பின்னர், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதற்கென ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் சென்றுள்ளனர்.