முதல்வர் வீட்டில் நடந்த கைகலப்பு! தாக்கப்பட்டாரா டெல்லி தலைமைச் செயலாளர்?

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அந்த மாநிலத் தலைமைச் செயலாளர் அன்சு பிரகாஷ்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

டெல்லி தலைமைச் செயலர் மீது தாக்குதல்

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் ஜவர்வல், அமானுல்லா கான் ஆகியோர் அவரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முன்னிலையிலேயே பிரகாஷின் சட்டையைப் பிடித்து, உலுக்கி முகத்தில் தாக்கியுள்ளனர். அன்சு பிரகாஷின் கண் கண்ணாடி நொறுங்கிப்போனதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தையடுத்து, அன்சு பிரகாஷ் டெல்லி மாநில லெப்டினென்ட் ஆளுநர் அனில் பைஜல் இல்லத்துக்குச் சென்று புகார் அளித்தார். 

இது குறித்து ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் சங்கத் தலைவர் மணீஷா சக்ஷேனா கூறுகையில், ``நள்ளிரவில் நடந்த கூட்டத்துக்கு அன்சு பிரகாஷ் மட்டும் தனியாக அழைக்கப்பட்டுள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் 10,12 எம்.எல்.ஏ-க்கள் அங்கே இருந்துள்ளனர். டெல்லியில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ரேஷன் அட்டை முறையாக வழங்கப்படாதது ஏன் என்பறு சில எம்.எல்.ஏ-க்கள் கேள்வி கேட்டுள்ளனர்.

 அப்போது, தலைமைச் செயலாளருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சமயத்தில் அவரைத் தாக்கியுள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பில்லை. நாங்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபடுவது ஆலோசித்து வருகிறோம். மக்கள் பணியைக் கருத்தில் கொண்டு கறுப்புப் பட்டை அணிந்துகொண்டு தற்போது பணி புரியப் போகிறோம்'' என்றார். 

டெல்லி தலைமைச் செயலர் மீது தாக்குதல்

ஆம்ஆத்மி கட்சி சம்பவத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ''ஆதார் அட்டை இல்லாத 2.5 லட்சம் குடும்பத்தினருக்கு ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை. மக்கள் எம்.எல்.ஏ-க்களை கேள்வி கேட்கின்றனர். இது குறித்து தலைமைச் செயலரிடம் கேட்டபோது, `மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எம்.எல்.ஏ-க்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லெப்டினென்ட் ஆளுநருக்கு மட்டுமே பதிலளிப்பேன்' என்று கூறியதோடு கோபமாகப் புறப்பட்டும் சென்றார். தலைமைச் செயலரைத் தாக்கியதாகச் சொல்வது முற்றிலும் ஜோடிக்கப்பபட்டது'' என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. 

டெல்லி மாநிலத் தலைமைச் செயலரின் செய்கைக்குப் பின்னால் பாரதிய ஜனதா கட்சி உள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி தலைமைச் செயலகத்தில் இன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!