வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (20/02/2018)

கடைசி தொடர்பு:21:29 (20/02/2018)

`பெங்களூருவுக்கு காவிரி அவசியமில்லை!’ - ஆதாரங்களை அடுக்கும் சூழல் ஆர்வலர்கள்

காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

2007-ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கர்நாடகாவுக்கு 14.75 டி.எம்.சி அளவு கூடுதலாகத் தண்ணீர் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொள்வதாகவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 15 ஆண்டுகள், மேல்முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, தமிழக விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

உண்மையில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் நிலை என்ன. பெங்களூரு நகரின் நிலை என்ன என்பது குறித்து பேசுவதற்காகச் சூழலியல் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதாகத் தெரிகிறது. குடிநீர் ஆதாரம் குறித்து கவலைப்படுவது நியாயமானதுதான். இருப்பினும், தமிழக டெல்டா மாவட்டங்களின் நிலத்தடி நீர் இருப்பு மற்றும் அதன் இன்றைய நிலை உள்ளிட்டவை குறித்து சரியான புள்ளி விவரங்கள் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதா அல்லது ஒரு சில தகவல்களை மட்டுமே  அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

காவிரி டெல்டா பகுதியில் உள்ள 239 வருவாய் உட்பிரிவுகளிலும் தமிழகப் பொதுப்பணித்துறை, மத்திய நிலத்தடி நீர் குழு ஆகியோர் இணைந்து நிலத்தடி நீர் குறித்து அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் வெளியாகின. 239 வருவாய் உட்பிரிவுகளில், பாதி இடங்களில் நிலத்தடி நீர் இருப்பு அதலபாதாளத்துக்குச் சென்றுள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலத்தடி நீராகப் பூமிக்குப் போய்ச்சேரும் நீரின் அளவு மற்றும் அங்கிருந்து உறிஞ்சப்படும் நீரின் அளவு ஆகியவற்றை ஒப்பிடும்போது உறிஞ்சப்படும் நீரின் அளவு 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறது. தஞ்சையில் உள்ள 50 வருவாய் உட்பிரிவில் உள்ள 39 வருவாய் உட்பிரிவுகளில் நிலத்தடி நீர் இருப்பு மோசமான நிலையிலேயே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 1,139 பிரிவுகளில் 359 பிரிவுகளில் நிலத்தடி நீர் மிக மோசமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே இந்த எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். 

மருத்துவர் புகழேந்திபெங்களூரு மாநகரின் குடிநீர்த் தேவை குறித்து பார்ப்பதற்கு முன்பாக, அந்நகர் குறித்த சில புள்ளிவிவரங்களை நாம் கவனிக்க வேண்டி இருக்கிறது. கடந்த 2001-ம் ஆண்டில் 51 லட்சமாக இருந்த பெங்களூரு மாநகரின் மக்கள் தொகை, 2011-ம் ஆண்டில் 85 லட்சமாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை வரும் 2020-ம் ஆண்டில் 95 லட்சமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2007-ம் ஆண்டில் 504 சதுர கிலோமீட்டராக இருந்த பெங்களூரு மாநகரம், தற்போது 800 சதுர கிலோமீட்டர் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. மக்கள் அடர்த்தியைப் பொறுத்தவரை ஒரு சதுர கிலோ மீட்டரில் 11,500 பேர் வசிக்கிறார்கள். 

பெங்களூரு நகரின் குடிநீர்ப் பிரச்னை குறித்து அம்மாநில நிலத்தடி நீர் ஆய்வுக் குழுவின் முன்னாள் உறுப்பினரான கே.சி.சுபாஷ் சந்திரா மற்றும் ஜி.வி.ஹெக்டே ஆகிய 2 பேர் இணைந்து `Bangalore water resources management: challenges and remedies’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர். கடந்த 2012-ல் வெளியான  அந்தப் புத்தகத்தில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்னை மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக அலசப்பட்டிருக்கிறது. 

நகரில் ரியல் எஸ்டேட் தொழில் பரந்து விரிந்துள்ளதாகவும் அதனால் குடியிருப்புகளுக்கான நீரை எடுக்க அதிக எண்ணிக்கையில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் ஹஸரா கட்டா, திப்பக்கொண்டனஹள்ளி என 2 நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. ஆனால், அவை பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. அதேபோல், பெங்களூரு நகரின் கிழக்கில் பொன்னை ஆறும், மேற்கில் ஆர்க்காவதி ஆறும் ஓடுகின்றன. காவிரி ஆற்றின் கிளை நதிகளான இவை ஆக்கிரமிப்புகளால் துவண்டு கிடக்கின்றன என்கிறார்கள் சுபாஷும் அவரின் நண்பர் ஹெக்டேவும். 
அபரிமிதமான வளர்ச்சி மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், மழைநீர் வடிகால்கள் ஆக்கிரமிப்புகளால், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், குடிநீரில் கலப்பதால் 170 மில்லியன் கியூபிக் லிட்டர் நீர் வீணாகிறது. குடிநீர் கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்படும் கசிவுகளால் ஏறக்குறைய 30 சதவிகிதம், அதாவது 159 மில்லியன் கியூபிக் லிட்டர். மேலும் குடிநீர் திருட்டு உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 40 சதவிகித குடிநீர் வீணாகிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் சரிசெய்தாலே 93 லட்சம் மக்களுக்கு எளிதாகக் குடிநீர் விநியோகிக்க முடியும் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். 

பெங்களூரு நிலத்தடி நீர் குறித்த தகவல்களும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு கணக்கின்படி பெங்களூருவில் சேகரமாகும் நிலத்தடி நீரின் அளவு 33 மில்லியன் கியூபிக் லிட்டர் என்ற நிலையில் இருக்க, உறிஞ்சப்படும் நீரின் அளவோ 124.51 மில்லியன் கியூபிக் லிட்டர். சேகரமாகும் நீரின் அளவைவிட உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு 358 சதவிகிதம் அதிகம் என அந்தப் புத்தகத்தில் தெளிவாக இருக்கிறது. அதேபோல், 2012-ல் பெங்களூருவில் இருந்த ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கை 3,12,000. அந்த எண்ணிக்கை தற்போது 4 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. 240-260 மீட்டர் ஆழத்திலும் தற்போது நீர் இல்லை என்ற நிலைதான் பெங்களூருவின் தற்போதைய நிலை. 

பெங்களூருவில் ஆண்டுக்கு கழிவுநீர் 401 மில்லியன் கியூபிக் லிட்டர் சேகரமாகிறது. இதில், 70 சதவிகித நீரை மறுசுழற்சி செய்து, அதில் 60 சதவிகிதத்தை மீண்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தினால் மட்டுமே 33 லட்சம் பேருக்கு எளிதாகக் குடிநீர் வசதியை அளிக்க முடியும். அதேபோல், மழைநீர் சேகரிப்பை 70 சதவிகிதம் முறைப்படுத்தினாலே 6 லட்சம் பேருக்கு முறையாகக் குடிநீர் அளிக்க முடியும். பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காகக் காவிரியில் இருந்து ஓராண்டுக்கு 478 மில்லியன் கியூபிக் லிட்டர் நீரை எடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் ஒரு நபருக்கு, ஒருநாளைக்கு 140 லிட்டர் நீர் என்ற விகிதத்தில் இது கணக்கிடப்பட்டுள்ளது. 
இப்படி பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய அங்கிருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்தால் மட்டுமே போதுமானது. தமிழகத்தின் நிலத்தடி நீர் குறித்த தகவல்களைக் கணக்கில் கொண்ட உச்ச நீதிமன்றம், கர்நாடக மாநிலத்தின் நிலத்தடி நீர் குறித்த முறையான புள்ளிவிவரங்கள் இல்லை என்பதால் அதைக்கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இது எப்படி நியாயமாகும்’’ என்று ஆதங்கத்தோடு முடித்தார்.