ஆய்விற்காக முதியவர்கள் ஆம்புலென்ஸில் கடத்தல்? உத்திரமேரூரில் தொடரும் சர்ச்சை!

செங்கல்பட்டு அருகே இறந்த பெண் ஒருவரையும், இரண்டு முதியவர்களையும் ஆம்புலன்ஸ் மூலமாக கடத்தல் செய்ததாகப் பொதுமக்கள் தெரிவித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரத்தில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று நடத்திவரும் அனாதைகள் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற நிலையில் உள்ள முதியவர்களை தங்க வைத்துள்ளனர். நோய் மற்றும் வயது முதிர்வு ஆகிய காரணங்களால் உயிரிழப்பவர்களை ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பில் உடலை போட்டுவிடுவார்கள். அழுகிய உடலில் மீதம் இருக்கும் எலும்புகளை மருந்து தயாரிப்பதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பல வருடங்களாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று (20.2.2018) தாம்பரத்திலிருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றில் 2 முதியவர்களும், உயிரிழந்த பெண் ஒருவரின் உடலும் கடத்தப்படுவதாக ஆம்புலன்ஸில் வந்த அண்ணம்மாள் என்ற பெண் கூச்சலிட்டார். இதனை கண்ட அப்பகுதியினர் ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.  இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஆம்புலன்ஸில் இருந்த பெண் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும், முதியவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உத்திரமேருர் தாசில்தார் அகிலாதேவி, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டம் செய்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முதியோர் இல்லத்திற்கு பிச்சை எடுப்பவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் சாலைகளில் கிடப்பவர்கள் என ஆதரவற்ற முதியவர்களை கொண்டு செல்கிறார்கள். பல வருடங்களாகவே அந்த இல்லத்தில் இறந்த முதியவர்களின் எலும்புகளை ஆராய்ச்சிக்காக ஏற்றுமதி செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். காவல்துறையினர் உரிய விசாரணை செய்யாமலும், விளக்கம் அளிக்காமலும் இருப்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!