என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மத்திய அமைச்சர்தான் பொறுப்பு..! சுப.உதயகுமாரன் குற்றச்சாட்டு!

துறைமுக ஆதரவு இயக்கம் என்கிற பெயரில் பா.ஜ.க-வினர் தன்னைக் குறிவைத்து பேசி வருவதால், தனது உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனே பொறுப்பு என சுப.உதயகுமாரன் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியரிடமும் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

சுப.உதயகுமாரன் குற்றச்சாட்டு

பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவரான சுப.உதயகுமாரன் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், ‘’சரக்குப் பெட்டக துறைமுகம் என்கிற பெயரில் குமரி முனையில் ஒரு அழிவுத் திட்டத்தைக் கொண்டுவர திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதுபற்றி தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகிறேன். 

இந்தத் திட்டத்துக்கு எதிரான போராட்டக் குழுவில் நான் தலைவராகவோ உறுப்பினராகவோ இருக்கவில்லை. ஆனால், துறைமுக ஆதரவுக் குழுவின் தலைவரான வேல்பாண்டியன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எனக்கு எதிரான அவதூறுப் பிரசாரத்தை மாவட்டம் முழுவதும் செய்து வருகிறார்கள். துறைமுக ஆதரவு வாகனப் பிரசாரம் என்கிற பெயரில் பல பகுதிகளில் பேச்சாளர்கள் எனது பெயரைக் குறிப்பிட்டுத் தரக்குறைவாகப் பேசுகின்றனர். 

அத்துடன், ஓய்வு பெற்ற ஆய்வாளர் லால்மோகன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான தேவசகாயம் மற்றும் எனது பெயரைக் குறிப்பிட்டு அவதூறுப் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இந்தப் போஸ்டர்களில் வெளியிட்டவர்களின் பெயரோ விவரங்களோ தொலைபேசி எண்ணோ குறிப்பிடப்படவில்லை. எனவே, இதுபோன்று அவதூறாகப் பேசியும் சுவரொட்டிகளை ஒட்டியும் வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எங்களைக் குறித்து அவதூறு பரப்பப்படுவதால், நாங்கள் வசிக்கும் பகுதியில் காவல்துறையின் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், எங்களது வசிப்பிடங்களில் காவல்துறை அதிகாரிகள் கூடுதல் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்’’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுப.உதயகுமாரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’’பா.ஜ.க-வினரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் எங்களைக் குறித்து மாவட்டம் முழுவதும் மொட்டை சுவரொட்டிகளை ஒட்டி அவதூறு பிரசாரம் செய்து வருகிறார்கள். அதனால் எங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!