’சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்’ - பி.ஆர்.பாண்டியன் நாகர்கோவிலில் பேட்டி | The black flag will be shown to the prime minister, says farmers association

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (20/02/2018)

கடைசி தொடர்பு:21:10 (20/02/2018)

’சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம்’ - பி.ஆர்.பாண்டியன் நாகர்கோவிலில் பேட்டி

காவிரி பிரச்னை, ஒகி பாதிப்பு, மீனவருக்கு நிவாரணம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக வரும் 24-ம் தேதி சென்னைக்கு வருகை தரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரான பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

கருப்புக்கொடி போராட்ட அறிவிப்பு

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ’’குமரி மாவட்டத்தில் ஒகி புயல் தாக்கியதில் விவசாயிகளும் மீனவர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இந்தப் பாதிப்பு ஏற்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பிறகும் மத்திய அரசு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. பாதிக்கப்பட்டப் பகுதிகளை பிரதமரும் முதல்வரும் நேரில் பார்வையிட்டும் விவசாயிகளுக்கு பாதிப்பிற்கேற்ப முழுமையான இழப்பீடு வழங்கப்படவில்லை.

ஒகி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்களுக்கு கேரளாவைப் பின்பற்றி உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அது போன்று அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அத்துடன், கடலில் காணாமல் போன மீனவர்கள் குறித்து உறுதியான தகவல்களும் வெளியிடப்படவில்லை. அதனால் பல மீனவ குடும்பத்தினர் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டு அரசின் உதவியும் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். 

காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கர் சாகுபடி பயிர்கள் கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கி விட்டன. கருகும் பயிரைக் காப்பாற்ற தண்ணீர் பெற்றுத் தர வலியுறுத்தி தொடர் போராட்டங்களை அப்பகுதி விவசாயிகள் நடத்தியும் அதனை பிரதமர் காதில் வாங்க மறுப்பது வேதனை தருவதாக உள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்ததுடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

அதனால் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திட வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடியைக் காட்ட விவசாயிகள் சார்பாக முடிவு செய்துள்ளோம். வரும் 24-ம் தேதி அவர் சென்னை வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மாலை 3 மணியாவில் கறுப்புக்கொடி காட்டுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

காவிரிக்காக 25 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுவதை வரவேற்கிறேன். அந்தக் கூட்டத்துக்கு விவசாயிகளை அழைக்காதது வருத்தமளித்தாலும், இக்கூட்டம் காவிரி உரிமையை மீட்பதற்கு உரிய முடிவை உறுதியோடும், ஒற்றுமையோடும் வலிமையோடும் எடுக்கும் என நம்புகிறோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்தை முதல்வர் தலைமையில் அனைத்து தலைவர்களோடும் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்த அனுமதி வழங்கப்படுமானால் கறுப்புக்கொடி போராட்டத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம்* என்றார்.