வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (20/02/2018)

கடைசி தொடர்பு:20:27 (20/02/2018)

`காட்டுமிராண்டித்தனமான போலீஸ் அதிகாரியின் தாக்குதல்!’ - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காட்டம்

தாக்கப்பட்ட சிபிஎம் கட்சியினர்

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் செண்டிரிங் மரப் பலகையைக் கொண்டு கூடுதல் எஸ்.பி மற்றும் போலீஸார் கட்சித் தொண்டர்களைத் தாக்கியது காட்டிமிராண்டித்தனமானது என்று அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவரிடம் பேசினோம். கனகராஜ் சிபிஎம் ``இந்த மாநாட்டின் ஆரம்பத்திலிருந்தே ஏ.எஸ்.பி செல்வ நாகரத்தினம் முரண்டு பிடித்துக்கொண்டேதான் இருந்தார். ஒரு மாநாடு நடத்தும்போது பேரணி நடப்பது இயல்பு. அதன்படி முறைப்படி அனுமதி கேட்டோம். நேற்று (19.2.2018) இரவு திடீரென அனுமதி இல்லை என்று கூறினார் அந்த அதிகாரி. பிறகு இடத்தை மாற்றிச் சொன்னார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அமைதியான முறையில் பேரணி தொடங்க இருந்தநிலையில், அந்த அதிகாரியின் கையில் என்ன இருக்கிறது பாருங்கள். பொதுவாகப் போலீஸார் தடியோ துப்பாக்கியோ வைத்துக்கொள்வார்கள். ஆனால் இவரின் கையில், சென்ட்ரிங் கட்டை இருக்கிறது என்பதே அந்த இடத்தில் நடந்ததைச் சொல்லிவிடும். கம்பிகளையும் வைத்து தாக்கியிருக்கிறார்கள். சென்ட்ரிங் கட்டையில் ஒட்டியிருந்த சிமென்ட் துண்டுகள் தாக்கப்பட்டவர்களின் காயத்துடன் ஒட்டியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மரக்கட்டையால் அடித்ததில் ஒரு துண்டு குழந்தையின் தலையில் பட்டது. இதில், அந்தக் குழந்தைக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. போலீஸார் நடத்திய தாக்குதலில் ஒருவருக்கு ஏழு தையல் மற்றும் மற்றொருவருக்கு ஆறு தையல் போடுமளவுக்குக் காயம் ஏற்பட்டது. மேலும், காயமடைந்த இன்னொருவருக்கு நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளன.  

இதுபோல் மிருகத்தனம் கொண்ட சிலர், காவல்துறையில் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அண்மைக்காலமாகத் தோழர்கள், பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் இதைப் பார்க்கமுடிகிறது. காவல்துறையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டிய அமைச்சர் எப்படி இருக்க வேண்டும். அப்படி ஓர் அரசியல் தலைமை இல்லாததால், இந்த மாதிரி காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ள வாய்ப்பாக அமைந்துவிடுகிறது’’ என்றார்.