வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (20/02/2018)

கடைசி தொடர்பு:11:50 (16/03/2018)

அமைச்சர் சொல்படி நடக்கிறதா சி.பி.சி.ஐ.டி? - குற்றம் சாட்டும் முத்துக்குமாரசாமியின் உறவினர்கள்!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. 

முத்துகுமாரசாமிவேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி, கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நெல்லையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸார், அப்போதைய வேளாண்துறை அமைச்சராக இருந்த ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளரான பூவையா முன் ஜாமீன் பெற்றார். 

நெல்லை வேளாண்மைத் துறையில் காலியாக இருந்த 14 தற்காலிக டிரைவர் பணியிடத்தை நிரப்புவதில் ஒவ்வொருவரிடமும் 3 லட்சம் ரூபாய் வீதம் லஞ்சம் வசூலித்துத் தருமாறு நெருக்கடி ஏற்படுத்தியதால் முத்துக்குமாரசாமி மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ’அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். 

இதனை மறுத்த ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி, ‘எனக்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 600 கி.மீ தொலைவிலிருந்து ஒருவரை மிரட்டவோ நெருக்கடி கொடுக்கவோ வாய்ப்பு இல்லை. அதனால் என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முத்துக்குமாரசாமியின் மனைவி சரஸ்வதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முத்துக்குமாரசாமியின் குடும்பத்துக்காக ஆஜராகும் வழக்கறிஞரும் அவரது உறவினருமான பிரம்மாவிடம் பேசியபோது, ‘‘ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி சரியாகக் கையாளவில்லை. இதில் தொடர்புடைய உள்ளூர் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் பலரிடம் விசாரணை நடத்தவோ அவர்களை சாட்சிகளாக வழக்கில் சேர்க்கவோ அக்கறை காட்டவே இல்லை. நெல்லை நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

முத்துக்குமாரசாமி குடும்பம்

முத்துக்குமாரசாமியின் மனைவி சரஸ்வதி கீழ்நீதிமன்றத்தில் ஏற்கெனவே ரகசிய வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். அதில் தனது கணவருக்குச் சிலரால் நெருக்கடி கொடுக்கப்பட்டது குறித்தும், அதனால் அவருக்கு இருந்த மன அழுத்தம் பற்றியும் நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அடிக்கடி போன் மூலம் சிலர் மிரட்டியது பற்றியும் சொல்லியிருந்தார். அதனால் உயர்நீதிமன்ற விசாரணையின் போது எங்களது கருத்தையும் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று சரஸ்வதி சார்பாக நானும் வழக்கறிஞர் சரவணன் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தோம். 

ஆனால், இந்த வழக்கு விசாரணையின்போது எங்களுக்குத் தகவலே தெரிவிக்கப்படவில்லை. நீதிமன்றம் சார்பாக வெளியிடப்படும் பட்டியலிலும் எங்கள் தரப்பு வழக்கறிஞர்களின் பெயர் இடம்பெறாததால் எங்களுக்குத் தெரியாமலேயே வழக்கு விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. எங்கள் தரப்புக் கருத்தைச் சொல்ல வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், இந்த வழக்கிலிருந்து ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றம் விடுவித்தது. 

வழக்கறிஞர் பிரம்மாஇது தொடர்பான தீர்ப்பில் கூட நாங்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்ட விவரம் இருக்கிறது. அப்படியிருந்தும் பாதிக்கப்பட்ட எங்களுக்குத் தகவல் தெரிவிக்காமலே இந்த வழக்கு முடிக்கப்பட்டு விட்டது. அதனால் இந்த விசாரணை ஏற்கத்தக்கது அல்ல. அதனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். இது தொடர்பாக விடுவிக்கப்பட்ட ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கம் கேட்கப்பட்டு விட்டது. அதனால் விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்.

இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம். சி.பி.ஐ. விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த வழக்கிலிருந்து உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. ஆனால், இந்த வழக்கை சி.பி.ஐ. யிடம் ஒப்படைக்காமல் தமி்ழக அரசு இழுத்தடிப்பதால் உண்மை வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. நேர்மையாக வாழ்ந்த ஒரு அதிகாரிக்கு லஞ்சம் வாங்கச் சொல்லி நெருக்கடி கொடுக்கப்பட்ட விவகாரத்தில், அதற்குக் காரணமானவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட்ட வேண்டும். நீதி தேவதையும் முத்துக்குமாரசாமியின் ஆத்மாவும் உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

 


டிரெண்டிங் @ விகடன்