`பா.ஜ.க-வின் துணைக் கிரகம் அ.தி.மு.க.!’ - சி.பி.எம். புதுச் செயலாளர் ஓப்பனிங் விளாசல்!

சிபிஎம்

”மக்கள்விரோத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்து பிரசார இயக்கம் நடத்தப்படும்” என்று சி.பி.எம். கட்சியின் மாநில மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள கே.பாலகிருஷ்ணன் இன்று தனி அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்தப் பதவிக்கு வந்ததும் அவர் வெளியிடும் முதல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. 

அந்த அறிக்கை விவரம்: ``மத்திய வகுப்புவாத பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளின் கருவூலத்தை நிரப்புவதில் கண்ணும்கருத்துமாய் செயல்படுகிறது. ‘வளர்ச்சி’ கவர்ச்சியான என்ற முழக்கத்தோடு எடுக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள் பெருமுதலாளிகளையே கொழுக்க வைக்கிறது. சிறு உடைமையாளர்களையும், சிறு உற்பத்தியாளர்களையும், வேளாண் குடிகளையும், சுயதொழில் செய்வோரையும் அழித்து வருகிறது. பணமதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி. வரியின் செயல்முறையும் பெரும் பாதகங்களை நிகழ்த்தி விட்டன. பெட்ரோல், டீசல் விலையேற்றமும் இதர அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றங்களும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சிதைக்கின்றன. தொழில் இழந்தோர், வேலையிழந்தோர், நிலம் இழந்தோர், வருமானம் இழந்தோர், சேமிப்புகளை இழந்தோர், பட்ட கடனால் நிம்மதியிழந்தோர் எனத் தற்கொலை நிகழ்வுகள் அதிர வைக்கின்றன.

வளர்ச்சியின் பலன் எல்லோருக்கும் கிடைக்கச் செய்யும் அரசியல், பொருளாதார முறைமை வேண்டும். கல்வியும், மருத்துவமும் அரசின் பொறுப்பில் இருக்க வேண்டும். இவற்றை இலவசமாகப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். இதற்கு இடதுசாரி மாற்றே தீர்வாகும். மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி வரும் பா.ஜ.க. அரசு தனது மதவெறி வகுப்புவாதச் செயல்களை அரசு இயந்திரத்திலும் புகுத்தி பரவலாக்கி வருகிறது. நாங்களே ராணுவம் என்று அறிவிக்கத்துணியும் அளவிற்கு செல்கிறது.மத்தியிலும், பாஜக ஆளும் எல்லா மாநிலங்களிலும், அனைத்துத் துறைகளும் ஊழல்மயமாகியுள்ளன. நீரவ் மோடியின் வங்கி மோசடி இதற்கு சமீபத்திய உதாரணம்.

சிறுபான்மையினர், தலித்துகள் வேட்டையாடப்படுகிறார்கள். வகுப்புவாதத்தை எதிர்த்து, தேசத்தின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பின்மைக்கும் குரல் கொடுக்கும் அறிவு ஜீவிகளும், பகுத்தறிவாளா்களும், கம்யூனிஸ்ட்டுகளும் கொல்லப்படுகின்றனர். கருத்துரிமை, பேச்சுரிமை, இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, உணவு உரிமை, உடுத்தும் உரிமை என எல்லாவற்றையும் பறிக்கிறார்கள். பொதுத்துறை அழிப்பிலும் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது. பாசிசத் தன்மையிலான இந்தத் தாக்குதல்களை முறியடித்தே தீர வேண்டும்.

மத்திய பாஜக அரசு பின்பற்றும் அதே வகையான பொருளாதாரக் கொள்கைகளையே தமிழகத்தில் அஇஅதிமுக அரசு நகல் எடுத்து பின்பற்றுகிறது. இதனால் பாரம்பர்யத் தொழில்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டிவிட்டது. கிராமப்புறப் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. நீர்ப்பாசனம் புறக்கணிக்கப்பட்டதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுப்படியாகாத விலைகளாலும் அவசியமான நேரத்தில் அரசின் ஆதரவு கிட்டாததாலும் சாகுபடி பரப்பளவே குறைந்து வருகிறது.

மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும், சத்துணவுப் பணியாளா் முதல் பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் வரை எல்லாவற்றிலும் ஊழல் மலிந்துபோயிருப்பதும், கொள்ளை லாபத்திற்காக சுற்றுச்சூழலைக்கூட நாசமாக்குவதும் தமிழகத்தின் வேதனையாக மாறியுள்ளது.

தலித், ஆதிவாசி மக்கள் மீதான தாக்குதல்களும், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. மாற்றுத் திறனாளிகளின் நியாயமான பல கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மாநில உரிமைகள் மத்திய அரசினால் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. இந்தித் திணிப்பு முயற்சி தீவிரமாக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்காடுமொழியாக தமிழை மாற்ற, மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மாநில உரிமைகளைக் காத்திட குரல் எழுப்ப வேண்டிய அஇஅதிமுக அரசு அதற்கு துணைபோகிற அரசியல் அடிமைத்தனம் அரங்கேறி வருகிறது. பாஜகவின் துணைக் கிரகமாக அஇஅதிமுக மாற்றப்படுகிறது.

அஇஅதிமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடித்தாக வேண்டும். மத்திய பாஜக மற்றும் மாநில அஇஅதிமுக அரசின் மோசமான செயல்பாடு தமிழகத்தின் அரசியல் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை உண்டாக்கும். மாநில உரிமைகள் காவு கொடுக்கப்படும். தமிழகத்தின் சமூக நல்லிணக்கமும், மதச்சார்பற்ற பாரம்பர்யமும் அழிக்கப்படும் ஆபத்து எழுந்துள்ளது. மத்திய பாஜக அரசையும், அஇஅதிமுக அரசின் தவறான அரசியல் பொருளாதார நடவடிக்கைகளையும் மாநில உரிமைகள் பறிப்பிற்குத் துணைபோவதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நான்கு முனைகளிலிருந்து தொடர் பிரசார இயக்கத்தை மேற்கொள்வதென்று கட்சியின் 22வது தமிழ்நாடு மாநாடு தீர்மானிக்கிறது” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!