`மத்திய, மாநில அரசுகளை ஒழித்து ஓரம்கட்டுவோம்!' - சி.பி.எம் புதிய மாநிலச் செயலாளர் பேச்சு | need to get rid of the state and central government - says new Secretary of CPM

வெளியிடப்பட்ட நேரம்: 08:11 (21/02/2018)

கடைசி தொடர்பு:11:09 (21/02/2018)

`மத்திய, மாநில அரசுகளை ஒழித்து ஓரம்கட்டுவோம்!' - சி.பி.எம் புதிய மாநிலச் செயலாளர் பேச்சு

'தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியையும் மத்தியில் பா.ஜ.க., ஆட்சியையும் ஒழித்து ஓரம் கட்ட வேண்டும். இந்த இரண்டு சக்திகளையும் வீழ்த்த யுக்திகளைச் செயல்படுத்த, மாநாட்டில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது' என புதிதாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

K.balakrishnan

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது தமிழக மாநில மாநாடு, கடந்த 17-ம் தேதி தூத்துக்குடியில் துவங்கி 4 நாள்கள்  நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்தின்  புதிய மாநிலச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலகிருஷ்ணன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மாநிலச் செயலாளராக இருந்த ஜி.ராமகிருஷ்ணன், மாநில அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், 'தமிழக மக்களைப் பாதித்த முக்கிய பிரச்னைகள், மீனவர்கள் நலன், விவசாயிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவைகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் தொடர்ந்து பறிக்கப்பட்டுவருகின்றன. இதை எதிர்த்து கேள்வி கேட்கவேண்டிய எடப்பாடி அரசு, வாயை மூடிக்கொண்டு தலையாட்டி பொம்மைபோல தலையை ஆட்டிக்கொண்டு இருக்கிறது. மத்திய மோடி அரசுக்கு எடுபிடியாக செயல்படும் எடப்பாடி அரசை மாநிலத்தில் இருந்தும், ஒட்டு மொத்த இந்தியாவை பின்னோக்கிக் கொண்டுவந்து கற்கால அரசியல் செய்து வரும் பிரதமர் மோடி அரசை டெல்லியிலிருந்தும் ஒழித்து, ஓரம்கட்ட வேண்டும். இந்த இரண்டு அரசையும் வீழ்த்தும் சக்திகளைச் செயல்படுத்த முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், இவர்களின் ஊழல் ஆட்சியைக் கண்டித்தும், வரும் ஏப்ரல் முதல் 4  முனைகளில் இருந்து  பிரசாரப் பயணம்  மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். செந்தொண்டர்கள் பேரணியில் அணிவகுத்து வந்த தோழர்களில் 3 பேரையும், ஒரு குழந்தையையும் ஈவு இரக்கமில்லாமல் கட்டையால் சரமாரியாகத் தாக்கிய போலீஸாரின் செயல்பாடு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க