வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (21/02/2018)

கடைசி தொடர்பு:23:35 (21/02/2018)

மக்கள் நிலையைக் கண்டு இனிமேல்தான் எடுக்க வேண்டும் `விஸ்வரூபம்’ - மதுரையில் பொங்கிய கமல்ஹாசன்! - #LiveUpdates

மக்கள் நிலையைக் கண்டு இனிமேல்தான் எடுக்க வேண்டும் `விஸ்வரூபம்’ - மதுரையில் பொங்கிய கமல்ஹாசன்!

 

அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னர் கமல்ஹாசன் பேசத் தொடங்கினார். ``நான் தொடங்கியிருக்கும் நியாப்போரின் படை இது. அவர்களை அறிமுகப்படுத்துவதில் பேரானந்தம். அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக பேசலாம். 37 வருடங்களாக நற்பணியைச் செய்துகொண்டிருந்தோம். நாமும் நற்பணியை மட்டும் செய்துவிட்டு போகலாம் என்று நினைத்த போது, அதற்கும் இடைஞ்சல் செய்தார்கள். அதை யார் செய்தார்கள் என்று இப்போது கூற விரும்பவில்லை.

நான் பேச தயங்கியதை கெஜ்ரிவால் வெளிப்படையாக பேசியுள்ளார். மேடை நாகரீகம் கருதி பிறகு பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், கெஜ்ரிவால் அதைத் தொடங்கி வைத்துவிட்டார். எனது நேரமின்மையும், மக்களின் நேரமின்மையும் அவருக்குத் தெரியும். நான் மதிக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசும்போது `உங்கள் கட்சிக் கொள்கை என்ன’ என்று கேட்டார். இடதா, வலதா என இஸங்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்களுக்கு நல்லது எங்கிருந்தாலும் அதை எடுத்துக் கொள்வதே கொள்கை என்றேன். உடனடியாக செயலில் இறங்குங்கள் என்று அவர் வாழ்த்தினார். கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். நல்ல கல்வி, தரமான கல்வி அனைத்து தரப்பினருக்கும் போய்ச்சேர வேண்டும். சாதியையும், மதத்தையும் சொல்லிச்சொல்லி விளையாடிய விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும். இங்கு பணம் பற்றாக்குறை இல்லை. மனம்தான் பற்றாக்குறை. 

கட்சிக் கொடியில் இருக்கும் 6 கைகள், 6 மாநிலங்களைக் குறிக்கும். நடுவிலிருக்கும் நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். உற்றுப்பார்த்தீர்கள் என்றால் அதில் தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். நீங்கள் இடதா, வலதா  என்று கேட்கிறார்கள். அதற்காககத்தான் பெயரிலேயே மய்யத்தை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொன்னதைக் கலந்து எங்கள்  கொள்கைகளை உருவாக்கியிருக்கிறோம்’ என்றார்.

 

 

`அ.தி.மு.க. - தி.மு.க. இடையில் தமிழக மக்கள் சிக்கித்  தவிக்கிறார்கள்’ - கமல் முன் அதிர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் 

 


 

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, `தமிழகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். கமல்ஹாசனை ஒரு நல்ல நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த காரணத்துக்காக மட்டுமே நான் இங்கு வரவில்லை. அவர் ரியல் லைஃப் ஹீரோ. தமிழகத்தில் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான கட்சியின் தொடக்கவிழாவில் கலந்துகொள்வதில் பெருமையும், கௌரவுமும் கொள்கிறேன்.  

டெல்லியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஆம்ஆத்மி கட்சியை நாங்கள் தொடங்கினோம். மாற்றத்தை விரும்பிய டெல்லி மக்கள் 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை எங்களுக்கு அளித்தார்கள். டெல்லி மக்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளையும் மக்கள் நிராகரித்தனர். தமிழக மக்கள் அ.தி.மு.க. - தி.மு.க. என இரண்டு ஊழல் கட்சிகள் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு ஊழல் வேண்டுமென்றால் அவர்களுக்கு வாக்களியுங்கள். நேர்மையான அரசு வேண்டுமானால் கமல்ஹாசனுக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய சூழல் உங்களுக்கு இருந்தது.  ஆனால், தற்போது நீங்கள் மாற்றத்தை நோக்கி கமலுக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. - தி.மு.க. ஆகிய கட்சிகளை அகற்ற தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள். டெல்லி மக்கள் நிகழ்த்திய சாதனையை முறியடித்து தமிழகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்குங்கள். 

 

 

கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து:

`என் அன்பார்ந்த வணக்கம். மதிப்பிற்குரிய தமிழ் மக்களுக்கு என் வணக்கம்’ என்று தமிழில் கூறி வீடியோ மூலம் கமலின் அரசியல் பிரவேசத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். 

உயர்மட்டக் குழு நிர்வாகிகள் அறிவிப்பு - மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டது. இதில், கமலின் நண்பரும், பேராசிரியருமான கு.ஞானசம்பந்தன், சுகா, தங்கவேலு, பாரதி கிருஷ்ணகுமார், ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர், சவரிராஜன், ராஜசேகர், மூர்த்தி, மௌரியா, ராஜநாராயணன், ஆர்.ஆர்.சிவராம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், அகில இந்தியப் பொறுப்பாளராக தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளார். 

மாவட்டவாரியாக நிர்வாகிகள் அறிவிப்பு: பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்வாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்டவாரியான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, மேடையேற்றப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக மேடையில் வந்து நேரடியாகக் கமலைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுவிட்டு சென்றனர். 

பொதுக்கூட்ட மேடையில் கமல்: கட்சிப் பெயரை அறிவித்த பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனுடன் பொதுக்கூட்ட மேடையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி மற்றும் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் ஆகியோர் அமர்ந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. 

``மக்கள் நீதி மய்யம்’’  -  அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் 

பொதுக்கூட்ட மைதானத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் ``மக்கள் நீதி மய்யம்’’ என ரசிகர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். 

 

’தூய வெள்ளையில் இணைந்த கைகள்!’ - பொதுக்கூட்ட மைதானத்தில் கொடியேற்றிய கமல்! 
 

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன மேடைக்கு கமல்ஹாசன் வந்தார். அவருடன் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் மேடைக்கு வந்துள்ளனர். பொதுக்கூட்ட மேடைக்கு வருவதற்கு முன்பாக பொதுக்கூட்ட மைதானத்தில் அவரது கட்சிக் கொடியை கமல் ஏற்றிவைத்தார். விஸ்வரூபம் படத்தின் யாரென்று தெரிகிறதா பாடல் இசை பின்னணியில் ஒலிக்க கமல், தனது அரசியல் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். 

 

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சந்திப்பு: மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மேடைக்குச் செல்வதற்கு முன்பாக அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர்கள் இருவரும் ஒரே காரில் பொதுக்கூட்ட மேடைக்குப் புறப்பட்டுச் சென்றனர். 

 

 

 

 

 

'இளைஞர்களுக்கு முக்கியமானத்திட்டம் வைத்திருக்கிறேன்' - கமல்

மதுரை செல்லும் வழியில் திருப்புவனத்தில் பொதுமக்கள் திரண்டு நிற்க அங்கு காரில் இருந்தபடியே ஒரு நிமிடம் பேசினார் நடிகர் கமல்ஹாசன். அப்போது அவர், "திருப்புவனம் எப்போதுமே வளமான ஊர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஊர். இந்த ஊருக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கும் முக்கியமான திட்டம் வைத்திருக்கிறேன். அதை இங்கு சொல்லவில்லை.ஒத்தக்கடை கூட்டத்தில் அறிவிக்கிறேன் அங்கே வாருங்கள்," என்றார்.

கமல்

ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளா? நேர நெருக்கடியில் சிக்கிய கமல்ஹாசன் 

நேர நெருக்கடியால் அப்துல்கலாம் இல்லத்துக்குச் செல்லும் நிகழ்வு தவிர, கமல்ஹாசனின் மற்ற அனைத்து நிகழ்வுகளும் முழுமைப்பெறாமல் போனது.

நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை இன்று தொடங்கினார். ராமேஸ்வரம் அப்துல்கலாமின் இல்லத்தில் அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல், அங்கிருந்து கலாம் பயின்ற பள்ளி, கலாம் நினைவிடம்,  ராமேஸ்வரம் மீனவர்களுடன் கலந்துரையாடல், செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய 3 இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்று, பின்னர் மாலை மதுரையில் நடக்கும் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலாம் படித்த பள்ளிக்கு சென்று உரை நிகழ்த்த கமல்ஹாசனுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுமதி மறுத்தது. இதனால் அந்த நிகழ்வு மட்டும் ரத்தானது.

காலை 7.45 மணிக்குத் துவங்கிய இந்த பயணத்தில் முதல் நிகழ்வான அப்துல் கலாமின் இல்லத்துக்கு செல்லும் நிகழ்வு மட்டும் முறையாக நடந்தது. மற்ற நிகழ்வுகள் நேர நெருக்கடியால் வேக வேகமாக முடிக்கப்பட்டன. 2 நாட்களுக்கு திட்டமிடப்பட வேண்டிய பணிகள் ஒரே நாளில் திட்டமிடப்பட்டதால், ஒரே நாளில் இத்தனை நிகழ்வுகளிலும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. காலையில் துவங்கிய நேரச்சிக்கல், மாலை வரை நீடிக்கிறது. இதனால் மீனவர்களுடனான சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு உரிய நேரத்தை கமல்ஹாசனால் ஒதுக்க முடியவில்லை.

மானமதுரையிலும் 30 விநாடிகள் பேசிவிட்டு கிளம்பினார் கமல்ஹாசன்."உங்கள் அன்பில் நீந்தி வந்து கொண்டிருக்கிறேன். அடுத்த முறை உங்களை சந்தித்து நீண்ட நேரம் பேசுகிறேன். மதுரை பொதுக்கூட்டத்தில் பேசவேண்டியிருப்பதால் உங்களிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறேன்," என்று மட்டும் பேசி விடைபெற்றார் கமல்ஹாசன்.

 

மீனவர்கள் கமலிடம் முறையிட பல கோரிக்கைகளுடன் வந்திருந்த நிலையில், மீனவர்களை பின்னர் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றார் கமல்ஹாசன். அதேபோல், சொந்த ஊரில் கமல்ஹாசன் உரை நிகழ்த்தப்போவதை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் பரமக்குடி மக்கள். மேடையில் அவரை அசத்த சில நிகழ்வுகளோடு அப்பகுதியினர் காத்திருந்த நிலையில்,  நேர நெருக்கடி காரணமாக மேடை கூட ஏறாமல் காரில் இருந்தபடி ஒரு நிமிடம் பேசி விடைபெற்றார் கமல்ஹாசன்.

கெஜ்ரிவாலை வரவேற்க விரையும் கமல்

ராமேஸ்வரம் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், மதுரை செல்லும் வழியில் மூன்று இடங்களில் மக்கள் மத்தியில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையே கமல் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுரை வரவுள்ள நிலையில், அவரை வரவேற்க கமல் செல்வதால் இந்த இடங்களில் விரிவாக பேசாமல் ஓரிரு நிமிடங்களில் பேசி கடக்கிறார் கமல்ஹாசன்.

பரமக்குடியில் கமல்ஹாசன் பேசுவதற்காக இவருக்கு தனி மேடை அமைத்திருந்தனர். முதலில் மேடையை கடந்து சென்ற கமல்ஹாசன், சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் வந்தார். மேடையில் ஏறாமல் காரில் இருந்தபடியே பேசினார். அப்போது அவர் பேசுகையில், "எவ்வளவு அன்பு இருந்தால் இந்த வெயிலிலும் உங்கள் ஊர் பையனை பார்க்கக் காத்திருப்பீர்கள். இதற்கு என்ன கை மாறு செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. நிறைய வேலை இருக்கிறது. மீண்டும் உங்களிடம் வருவேன். மதுரையில் நடக்கும் நிகழ்வுக்கு வரும் டெல்லி முதல்வரை வரவேற்க செல்வதால் உடனடியாக கிளம்பிச்செல்கிறேன். மீண்டும் உங்களிடம் பேசுவேன்," என்றார். 

 

kamal

'நான் சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்கு' : ராமநாதபுரத்தில் மக்கள் மத்தியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "நான் 45 ஆண்டுகள் கழித்து இந்த ஊருக்கு வருகிறேன். ஊர் கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால், மக்கள் அப்படியே இருக்கிறார்கள். இங்கே என்னுடைய சித்தப்பா இருந்தார். நான் எப்போதும் நினைத்துக்கொள்வேன். ராமநாதபுரத்தில் எனக்கு ஒரு வீடு இருக்கு. எப்போதாவது அங்கு போக வேண்டும்' என்று. ஆனால், எனக்கு ஒரு வீடு இல்லை. இந்த ஊரே என் வீடுதான். 

உங்கள் அன்பை பார்த்து இங்கே ஒன்றைச் சொல்ல தோன்றுகிறது. இதை மதுரையில் சொல்லலாம் என நினைத்தேன். உங்கள் அன்பால் இங்கு சொல்கிறேன். என்னை இதுவரை சினிமா நட்சத்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தீர்கள். இனி நான் உங்கள் வீட்டு விளக்கு. என்னைப் பொத்திப்பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை ஏற்றி வைக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு. மேடைக்கு வரும் போது கூட்டத்தை பார்த்து கொஞ்சம் பயம் இருந்தது. யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடது என்று. ஆனால், மேடையில் வந்து நிற்கும் போது இந்த வாய்ப்பை நழுவ விடலாமா என்று தோன்றுகிறது. இந்த அன்பு நீச்சலில் நீந்தத்தான் வந்தேன். வெவ்வேறு இடங்களில் நீந்த வேண்டியிருக்கிறது," என்றார்.

கலாம் நினைவிடத்தில் கமல் : தனது அரசியல் பயணத்தை கலாம் இல்லத்திலிருந்து தொடங்கிய கமல்ஹாசன், மீனவர்கள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பையடுத்து, கலாம் நினைவிடம் சென்றார். பேக்கரும்பில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் கமல்ஹாசன் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து மதுரை நோக்கிப் புறப்படும் கமல்ஹாசன், செல்லும் வழியில் 3 இடங்களில் உரை நிகழ்த்த உள்ளார்.

கமல் அரசியல் மேடை

சரிந்தது எல்.இ.டி. ஸ்கிரீன் : மதுரையில் கமல் பொதுக்கூட்ட மேடையில் அமைக்கப்பட்டிருந்த மெகா எல்இடி ஸ்கிரீன் திடீரெனச் சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விழா பந்தலில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ச்சியாக அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, மாலையில் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'பள்ளிக்குச் செல்வதைதான் தடுக்க முடியும். பாடம் படிப்பதை அல்ல' : கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எளிமையான வீட்டிலிருந்து வந்த கலாம். அவர் வீட்டுக்குச் சென்றதில் மகிழ்ச்சி. அதில் அரசியல் ஏதுமில்லை. அவர் உணர்வு, நாட்டுப்பற்று எல்லாம் என்னைக் கவர்ந்தவை. என் பாடத்தில் ஒரு பகுதி அவரது வாழ்க்கை. அவர் பயின்ற பள்ளிக்குச் செல்ல திட்டமிட்டேன். வேண்டாம் என தடை போட்டு விட்டார்கள். நான் பள்ளிக்குச் செல்வதைதான் தடுக்க முடியுமே தவிர. பாடம் படிப்பதைத் தடுக்க முடியாது. 'தடைகளை வென்றே சரித்திரம் படைப்பவன்' என என் படத்தின் பாடல் வரும். அப்படித்தான் படிக்க வேண்டும் என்றால் அதையும் செய்யலாம். 

நேற்று இரவு சந்திரபாபு நாயுடு என்னிடம் போனில் பேசினார். அப்போது அவர், 'கொள்கையைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதை விட, மக்களுக்கு என்ன செய்ய முடியும் எனப் பட்டியல் போட்டுக்கொள்ளவும்' என்றார். அவர் எனக்கு முக்கியமான மனிதர். அரசியல் களத்தில் உள்ள பல ஹீரோக்களில் அவரும் ஒருவர். கலாம் இறுதிச் சடங்கில் ஏன் பங்கேற்கவில்லை எனக் கேட்கிறார்கள். யாருடைய இறுதி ஊர்வலங்களிலும் பங்கேற்பதில்லை என்பதை நான் கடைபிடிக்கிறேன். இதுவரை ரசிகர்களின் உள்ளங்களில் இருந்த நான் இனி அவர்களின் இல்லங்களில் இருக்க விரும்புகிறேன்," என்றார்.

'அடைமொழி'யாகும் நம்மவர் : தனது அரசியல் பயணத்தை இன்று தொடங்கிய நடிகர் கமல்ஹாசன், கலாம் இல்லத்தில் தொடங்கி தொடர்ந்து மீனவர்களைச் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். இந்நிலையில், கமல்ஹாசனின் நிகழ்வுகள் அனைத்தும் நம்மவர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வருகிறது. மீனவர்களுடனான சந்திப்பு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு இரண்டுமே 'நம்மவர் - மீனவர்கள் சந்திப்பு', 'நம்மவர் செய்தியாளர்கள் சந்திப்பு' என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

செய்தியாளர்களைச் சந்திக்கிறார் கமல் : இன்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், மீனவர்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து, தற்போது செய்தியாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடக்கும் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில், கலாம் பயின்ற பள்ளிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கலாம் வீட்டுக்குச் சென்ற அனுபவம் மற்றும் இன்றைய பயணங்கள்குறித்து பேசவிருக்கிறார். கமலின் அரசியல் பிரவேசம்குறித்து ஸ்டாலின், தமிழிசை ஆகியோர் விமர்சித்துள்ள நிலையில், அதற்கும் கமல்ஹாசன் பதிலளிப்பார் எனச் சொல்லப்படுகிறது.

கமல்

வாக்குறுதியை நிறைவேற்றாமல் திசை திருப்பும் அரசுகள் : மீனவர்களுடனான உரையாடலைத் தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். "ஏன் இங்கு வந்தேன் என்றால், தமிழகத்தில் மிக முக்கியமான தொழில்களில் உங்கள் தொழிலும் ஒன்று. அது, பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் சுக துக்கங்களைப் பத்திரிகை வாயிலாக அறிந்துகொள்வதற்குப் பதில், உங்களைச் சந்தித்து அறிந்துகொள்ளவே வந்திருக்கிறேன். இனி அப்படித்தான் நடக்கும். இந்த வாய்ப்பை நீங்கள் தர வேண்டும். வெவ்வேறு அரசுகள் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, அதை ஏன் நீங்கள் நிறைவேற்றவில்லை எனக் கேட்கும்போது, அதைத் திசைதிருப்ப வேறு பிரச்னைகளை வைப்பது வாடிக்கையாகிவிட்டது. கேள்வி கேட்பவர்களையும், தங்கள் உரிமை கோருபவர்களையும் தடியடி செய்து பதில் சொல்ல முடியாது. தன்னை விட பணிந்து மன்னிப்போ, நன்றியோ கேட்க வேண்டியது அரசின் கடமை. கடல் மேலாண்மை, நீங்கள் செயல்பட வேண்டிய விதம் அரசு செயல்பட வேண்டிய விதம் பற்றி மீண்டும் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும். உங்களுக்குப் புரியும் என நம்புகிறேன். மீண்டும் சந்தித்து உங்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுகிறேன்,'' என்றார்

 

 

தனியொருவராக கமல் : தனது அரசியல் பயணத்தைத் துவக்கியிருக்கும் நடிகர் கமல்ஹாசன், சற்று நேரத்தில் மீனவர்களைச் சந்தித்து உரையாட இருக்கிறார். இதற்கான கூட்டத்துக்கு, 'நம்மவர் மீனவர்கள் சந்திப்பு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில், ஒரே ஒரு இருக்கை போடப்பட்டுள்ளது. தனியொருவராக மேடையில் அமர்ந்து மீனவர்களிடம் பேசவிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். 

'பெரும்பேறு' - கமல் பெருமிதம் :  'கலாம் இல்லத்தில் தனது அரசியல் பயணத்தைத் துவங்கிய நடிகர் கமல்ஹாசன், அதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார். "பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்." என ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

நான்கு பொதுக்கூட்டங்களில் பேசுகிறார் கமல் : மீனவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, அப்துல் கலாம் நினைவிடம் செல்கிறார், நடிகர் கமல்ஹாசன். அங்கு அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து மதுரை நோக்கி புறப்படுகிறார். மதுரை செல்லும் வழியில், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தொடர்ந்து, மதுரையில் இரவு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன், தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திப் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்.

kamal

நம்மவர் மீனவர் சந்திப்பு : கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கமல்ஹாசன், அடுத்து ராமேஸ்வரத்தில் மீனவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு, 'நம்மவர் மீனவர்கள் சந்திப்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனுடனான சந்திப்புக்காக, ராமேஸ்வரம் கணேஷ் மஹாலில் மீனவர்கள் காத்திருக்கிறார்கள். அங்கு கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

kamal visit

வருகிறார் கெஜ்ரிவால் : கமல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, காலை 11 மணிக்கு டெல்லியிலிருந்து சென்னை வருகிறார், டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால். இன்று மாலை சென்னையிலிருந்து மதுரை செல்லும் அவர், இரவு மதுரையில் நடக்கும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இரவு மதுரையில் தங்கி, நாளை காலை மதுரையிலிருந்து சென்னை வந்து, பின்னர் டெல்லி செல்கிறார்.

மீனவர்களைச் சந்திக்கிறார் கமல் :  கலாம் இல்லத்திலிருந்து புறப்பட்ட நடிகர் கமல்ஹாசன், அடுத்து மீனவர்களைச் சந்தித்து  உரையாடவிருக்கிறார். ராமேஸ்வரம், கணேஷ் மஹாலில் மீனவர்களைச் சந்தித்து அவர் பேசவிருக்கிறார். 

அரசியல் இருக்கிறது - கமல் :  கலாம் பயின்ற பள்ளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்துக்குட்பட்டு தான் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதில் அரசியல் இருப்பதாகவும் கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார்.

கலாம் பள்ளிக்கு செல்லும் பயணம் ரத்து : கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன், கலாம் அண்ணன் மற்றும் பேரன்களைச் சந்தித்துப் பேசிவிட்டு, தற்போது கலாம் இல்லத்திலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, கலாம் பயின்ற பள்ளிக்குச் செல்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வித்துறை அதற்குத் தடை விதித்திருப்பதையடுத்து, அந்தப் பயணத்தை ரத்துசெய்திருக்கிறார் கமல்ஹாசன். கலாம் வீட்டிலிருந்து 'நாளை நமதே' எனும் அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

மதுரை முழுக்க 'நாளை நமதே' கொடி : இன்று மாலை மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன். டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக, மதுரையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கும் பகுதி மற்றும் மாநகரின் சில பகுதிகளில்,  'நாளை நமதே' என்ற பெயரில் கொடிகள் கட்டப்பட்டுள்ளன. தமிழக வரைபடத்தின் மேல் 'நாளை நமதே' என அச்சிடப்பட்டுள்ளது. கட்சியின் அதிகாரபூர்வ கொடியை மாலையில் கமல் அறிவிக்க உள்ளார்.

கமல் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக அப்துல்கலாம் இல்லத்துக்குச் சென்ற நடிகர் கமல்ஹாசன், அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரிடம் ஆசிபெற்று, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அப்துல் கலாம் இல்லத்தில், அவரது உறவினர்களிடம் தற்போது கமல் பேசிக்கொண்டிருக்கிறார்.

kalaam

பள்ளிக்குச் செல்ல கமலுக்குத் தடை : அப்துல் கலாம் படித்த பள்ளிக்குள் கமல் செல்ல தடை விதிக்கப்பட்டதையடுத்து, கலாம் பயின்ற பள்ளி முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பள்ளி முன்பு தடுப்பு வைத்துத் தடுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன், கலாம் வீட்டிலிருந்து பள்ளி வழியாகச் செல்ல உள்ள நிலையில், அவர் பள்ளிக்குள் செல்ல முயலக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. பள்ளிக்குள் செல்ல கமலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இன்று காலை 8.15 மணிக்கு, கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்கள் மத்தியில் அவர் உரையாட திட்டமிட்டிருந்தது. மாணவர்களிடம் கமல் அரசியல் பேச எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி புகார் அளித்ததால் அப்துல் கலாம் பயின்ற பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட கல்வித்துறை தடை விதித்தது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

கமல்

 

தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நாயகரான நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பயணத்தை துவங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை கமலஹாசன் துவக்கியிருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்துல்கலாமின் உறவினர்கள் அவரை வரவேற்றனர். அப்துல்கலாமின் சகோதரர், உறவினர்களிடம் பேசி வருகிறார். 

 

 

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க