ஆளுநர் வருகைக்காக அவசர கதியில் போடப்படும் சாலைகள்! | Trichy people complaints about poor road facilities

வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (21/02/2018)

கடைசி தொடர்பு:08:25 (21/02/2018)

ஆளுநர் வருகைக்காக அவசர கதியில் போடப்படும் சாலைகள்!

திருச்சிக்குத் தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகைக்காக அவசர கதியில் சாலைகள் போடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை (22/02/2018) நடைபெறுகிறது.இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொள்ள இரவு 9.30 மணியளவில் திருச்சி வந்து சேர்ந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, அமைச்சர் வளர்மதி, திருச்சி கலெக்டர் ராஜாமணி, திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், போலீஸ் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் வரவேற்றனர். அடுத்து அங்கிருந்து கிளம்பிய ஆளுநர், திருச்சி டி.வி.எஸ் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கிறார்.

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் மற்றும் ஶ்ரீரங்கம் செல்லும் ஆளுநர், சுவாமி தரிசனம் செய்கிறார். அடுத்து, மதியம் 2 மணி முதல் 3 மணிவரை சுற்றுலா மாளிகையில், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் மனுக்கள் பெறுகிறார். மாலை 4.30 மணிக்கு சமயபுரம் கோயிலுக்குச் செல்லக்கூடும். அதனைத் தொடர்ந்து மாலை விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

திருச்சியில் தங்கியுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகைக்காக திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் கருமண்டபம், கண்டோன்மென்ட் போன்ற பகுதிகள் பளபளக்கின்றன. சாலையில் துளியும் குப்பைகள் இல்லை. புதிய தார் சாலைகள் போடப்பட்டுள்ளன.

பொதுவாக முதல்வரோ அல்லது பிரதமரோ வந்தால்தான், அவர்கள் செல்லும் பாதைகள் சீரமைக்கப்படும். ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகைக்காக திருச்சி மாநகரில் உள்ள பல சாலைகள் அவசரகதியில் புதுப்பிக்கப்படுகின்றன. குறிப்பாக ஆளுநர் வந்து செல்லும் திருச்சி ஏர்போர்ட் சாலை, டி.வி.எஸ்.டோல்கேட், தில்லைநகர், மலைக்கோட்டை, கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளின் சாலைகள், சீரமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு மாவட்டத்துக்குப் போனால், அங்கு திடீர் ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் சாலைகள் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறதா, மற்றும் அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்றும்  ஆய்வு செய்கிறார்.

ஆளுநருக்காக சாலைகள்

 

இந்தப் பணி ஆய்வுக்கு தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம், ஆளுநர் வருகையின்போது கறுப்புக்கொடி காட்டவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்நிலையில், திருச்சி வந்துள்ள ஆளுநர், திடீர் ஆய்வு மேற்கொண்டால் அவர்கள் கண்களில் குறைகளே படக்கூடாது என நினைத்து, திருச்சி மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள், கூடுதலாக மெனக்கிடுவதுடன், இதுநாள்வரை குண்டும் குழியுமாகக் கிடந்த சாலைகளையெல்லாம் கோடிக்கணக்கில் செலவு செய்து புதுப்பிக்கின்றனர்.

மேலும் தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சி மாநகராட்சி முதலிடம் பெற வேண்டும் எனும் நோக்கத்துக்காகக் கடந்த சில மாதங்களாக மாநகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் துப்புரவு பணியாளர்கள் சென்று வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் பகுதி மற்றும் கருமண்டபம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார். இந்தப் பகுதிகளில் அவசரகதியில் போடப்படும் சாலைகள் எந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும், தரமானதாக இருக்கும் என்பதெல்லாம் இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.

தார்சாலைகளை அவசர கதியில் போட்டால் அடுத்து சில நாள்களிலேயே அப்படியே மாறிவிடும்.  சின்னச் சின்ன வண்டிகள் போனாலே தார் எடுத்துக்கொண்டு வந்துவிடும். சில இடங்களில் வெறுமனே ஜல்லியை மேலே கொட்டி தார் ஊற்றி சாலை போடுவது கண்கூடாகவே தெரிகிறது. சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் புதிய சாலைகளில் விலங்குகள் நடக்க தார்சாலைகள் பல் இளித்தன.

திருச்சியில் தங்கியுள்ள ஆளுநர் இன்னும் சற்று நேரத்தில் நகர் வலம் ஆரம்பிக்க உள்ளார். அவர் தங்கியுள்ள சுற்றுலா மாளிகையில் இருந்தே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க