தஷ்வந்த் சிக்கியது எப்படி? காவல்துறையின் ஸ்டேட்மெண்ட் | Police investigation reveals how they caught dhasvanth

வெளியிடப்பட்ட நேரம்: 10:09 (21/02/2018)

கடைசி தொடர்பு:10:10 (21/02/2018)

தஷ்வந்த் சிக்கியது எப்படி? காவல்துறையின் ஸ்டேட்மெண்ட்

தஷ்வந்த்

சென்னை குன்றத்தூர் அருகே சிறுமி ஹாசினியை அதே குடியிருப்பைச் சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்து, பின்னர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. தஷ்வந்த்-க்கு தூக்கு தண்டனையுடன், 46 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போலீஸார் தஷ்வந்த்-ஐ கைது செய்ததன் பின்னணியில் நடந்த தேடுதல் வேட்டையைப் பற்றி பார்ப்போம்...

போரூரை அடுத்த மதனந்தபுரம் மாதா நகரில் உள்ள 'நிகிதா பிளாட்ஸ்-ல்' தஷ்வந்த் வசித்தபோது, அதே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை அனகாபுத்துாரில் உள்ள முட்புதரில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம், 2017 பிப்ரவரி 5-ல் நடந்தது. இது தொடர்பான வழக்கை சென்னையை அடுத்த மாங்காடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு பிப்ரவரி 7-ம் தேதி தஷ்வந்தைக் கைது செய்தனர். அதன் பின்னர் மார்ச் 22-ம் தேதியன்று, தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் நீதிமன்றம், தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியது. அதன் பின்னர் அவருக்கு எதிரான குண்டர் சட்டமும் ரத்தானது. 

அதன்பின்னர் குன்றத்துாரில் உள்ள சம்பந்தம் நகரில் வாடகைக்குக் குடிபெயர்ந்தது தஷ்வந்தின் குடும்பம். பின்னர் 2017 டிசம்பர் 2-ம் தேதி, பணத்தகராறு காரணமாக, தன் தாய் சரளாவை சுத்தியலால் தலையில் அடித்துக் கொலைசெய்துவிட்டுத் தப்பினார். அவரைப் போலீஸார் மும்பையில் டிசம்பர் 8-ம் தேதி கைதுசெய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் காவல்துறையினரின் உழைப்பை நாம் தெரிந்துகொள்வோம்.

சைதாப்பேட்டையில் இருந்த இடத்தை விற்றுத்தான் தஷ்வந்த்-ன் தந்தை சேகர், தன் மகனை ஹாசினி கொலைவழக்கில் இருந்து செப்டம்பர் மாதம் வெளியே கொண்டுவந்தார். அதன்பின் குன்றத்தூரில் வாடகைக்குக் குடியேறிய பின்னர், வீட்டைவிட்டு தஷ்வந்த் வெளியே செல்வதற்குச் சில காலம் தடை விதிக்கப்பட்டது. பின்னர் எப்போதும்போல அவர் வெளியே செல்லத் தொடங்கியதும், வீட்டில் பணம் கேட்டு தாய் சரளாவையும் தந்தை சேகரையும் தொந்தரவு செய்திருக்கிறார் தஷ்வந்த். வீட்டில் பெறும் பணத்தை வைத்துக்கொண்டு மது குடிப்பது, கிளப் செல்வது என ஊதாரித்தனமாக வாழத் தொடங்கியிருக்கிறார். இதனால் மனம் நொந்துபோன அவரின் பெற்றோர், பணம் கொடுப்பதை ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டனர். இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் தன் தாய் சரளாவிடம் பணம் கேட்டிருக்கிறார் தஷ்வந்த். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, சுத்தியலைக்கொண்டு தாய் சரளா தலையில் கடுமையாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்த 4 பவுன் வளையல், 2 பவுன் தாலிச் சரடு ஆகியவற்றை எடுத்துச் சென்று தப்பியோடி விட்டார். 

தாய் சரளா மற்றும் தஷ்வந்த்

தாய் சரளா மற்றும் தஷ்வந்த்

இதுபற்றி புகார் வந்ததும், அலர்ட் ஆன குன்றத்தூர் போலீஸார், உடனடியாக குற்றவாளி தஷ்வந்த்-ஐப் பிடிக்க உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் எஸ்.ஐ பொற்பாதம் தலைமையில் மூன்று டீம்களாகப் பிரிந்து தேடுதலை முடுக்கிவிட்டனர். உதவி கமிஷனர் கண்ணன் தலைமையிலான டீம், தஷ்வந்தின் இருசக்கர வாகனத்தை மையமாகக் கொண்டும், மற்றொரு டீம் தஷ்வந்தின் நண்பர்கள் மற்றும் அவரைச் சிறையில் சந்தித்தவர்களை வைத்தும், மூன்றாவது டீம் தஷ்வந்தின் உறவினர்கள் வட்டாரத்தை மையமாகக் கொண்டும் தங்களின் விசாரணையைத் தொடங்கினர். 

இதற்கிடையே வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற 6 பவுன் தங்க நகைகளை விற்பதற்காக, தஷ்வந்த் தனக்கு ஜெயிலில் பழக்கமான ஜேம்ஸ் என்பவரின் நண்பரான டேவிட்டைச் சந்தித்து நகைகளை விற்றுத் தரும்படி தெரிவித்துள்ளார் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. டேவிட் தன் நண்பரான மணிகண்டன் என்பவரிடம் அந்த நகைகளைக் கொடுத்து விற்கச் சொல்லியிருக்கிறார். நகைகளை வாங்கிக்கொண்ட மணிகண்டன் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது. இந்நிலையில், அந்த நகைகளை எடுத்துக்கொண்டு மணிகண்டன் தலைமறைவாகி விடவே, கோபமடைந்த தஷ்வந்த், "உன்னை நம்பித்தானே நகைகளைக் கொடுத்தேன். எனக்குப் பணம் வந்தாக வேண்டும்" என்று டேவிட்டிடம்  மிரட்டல் விடுத்தார். ஆனால், "என்னிடம் அவ்வளவு பணம் இல்லை; மணிகண்டன் மாட்டும்போது, உனக்கு மொத்த பணத்தையும் தருகிறேன்" என்று சில ஆயிரங்களைக் கொடுத்தனுப்பினார் டேவிட். அந்தப் பணத்தைக் கொண்டு பெங்களூருவுக்கு தப்பினார் தஷ்வந்த். அங்கிருந்து மும்பைக்குப் போக வேண்டும் என்பதே தஷ்வந்தின் திட்டம்.

இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் குற்றவாளி பற்றிய தகவலை வெளியிட்டு, விசாரணையில் தலையைப் பிய்த்துக்கொண்டிருந்த போலீஸாருக்கு "சார், நீங்க தேடிக்கொண்டிருக்கும் குற்றவாளி ஒரு தனியார் பேருந்தில் மும்பைக்குச் சென்றுகொண்டு இருக்கிறான்" என்று தகவல் கிடைத்தது. 

"இந்தத் தகவல் உண்மையா என்று தெரியாது. ஒருவேளை உண்மையாக இருந்துவிட்டால்..." டிசம்பர் 3-ம் தேதி மாலை பெங்களூருவில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தனியார் பேருந்து அலுவலகத்தை போலீஸார் நாடினர். அங்கிருந்த சி.சி.டி.வி கேமாரவை சோதனையிட்டபோது, தலையில் மாஸ்க் அணிந்துகொண்டு தஷ்வந்த், அப்பேருந்தில் சென்றது ஊர்ஜிதம் செய்யப்பட்டு, டிக்கெட்டில் உள்ள பெயரை செக் செய்தனர். ஆனால், தஷ்வந்த் தன் பெயரில் டிக்கெட் போடாமல், உறவினர் பெயரில் எடுத்ததுடன் மொபைல் எண்ணையும் மாற்றிக்கொடுத்துப் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அன்றிரவே பெங்களூருவில் இருந்து இன்ஸ்பெக்டர் சார்லஸ், எஸ்.ஐ பொற்பாதம், எஸ்.ஐ காண்டீபன், ஹெட் கான்ஸ்டபிள் விக்டர், ஹெட் கான்ஸ்டபிள் மணிகண்டன் ஆகியோர் மும்பைக்கு விமானம் மூலம் விரைந்தனர். ஆனால், அவ்வளவு பெரிய மும்பை நகரில் குற்றவாளி தஷ்வந்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்ற எண்ணம் போலீஸாருக்குச் சவாலாக அமைந்தது. "குற்றவாளியை எப்படியும் பிடித்தே ஆக வேண்டும்" என்ற முனைப்புடன் மும்பை சென்ற போலீஸார் தேடுதல் வேட்டையைத் தீவிரமாகத் தொடங்கினர். 

மும்பையில் உள்ள தமிழ் அமைப்புகளின் உதவியுடன், தஷ்வந்த் பற்றிய தகவல்களைக் கொடுத்து சமூக வலைதளங்களில் பரவச் செய்தனர். இந்த நிலையில் டிசம்பர் 6-ம் தேதி காவல்துறையினருக்கு ஓர் அழைப்பு வந்தது. "சார்...தஷ்வந்தைப் போலவே ஒரு நபர் பாந்த்ராவில் இருக்கும் ரேஸ் கோர்ஸுக்குள் நுழைந்துள்ளார். எதற்கும் அங்குசென்று பாருங்கள்" என்று தொடர்பில் பேசியவர்கள் தெரிவித்தனர். உடனடியாகத் தமிழகத்தில் இருந்து சென்ற போலீஸார் அனைவரும் மஃப்டியில் பாந்த்ரா ரேஸ்கோர்ஸ் பகுதிக்குச் சென்றனர். சரியாக மாலை 4 மணிக்கு நுழைந்த போலீஸார், அது தஷ்வந்த்தான் என்பதை உறுதிசெய்தனர். அருகில் சென்று, "என்ன தம்பி எப்படி இருக்கீங்க..? இங்க எப்போ வந்தீங்க?" எனக் காவல்துறையினர் கேட்க, "நீங்கள் யார்?" என தஷ்வந்த் பதறினார். 

"நாங்களா, சென்னை போலீஸ். வா எங்களுடன், சென்னை போகலாம்..." என ஒரே அமுக்காக அமுக்கினர். சென்னை காவல்துறை உயரதிகாரிகளுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. "தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்" என்ற தகவல் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்டது. என்றாலும் கைதான குற்றவாளியை, அப்படியே தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர முடியாது. அங்குள்ள மாஜிஸ்டிரேட்டிடம் அனுமதி பெற வேண்டும். 

இரவு ஆகிவிட்டபடியால், எப்படியும் அடுத்த நாளான 7-ம் தேதிதான் அனுமதி வாங்க முடியும் என்பதால், அங்குள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினர். அதற்கு அடுத்த நாள் மதியம் மாஜிஸ்டிரேட்டிடம் அனுமதி வாங்கப்பட்டது. 'குற்றவாளியை சென்னைக்கு அழைத்துச் செல்லப்போகிறோம்' என்ற குஷியில் இருந்த போலீஸாருக்கு பெரும் துயரம் விமான நிலையத்தில் காத்திருந்தது. மதியம் 1.30 மணியளவில் அனைவரும் விமான நிலையம் வந்தடைந்தனர். குற்றவாளியின் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்ததால் விமான நிலைய அதிகாரிகள் அனைவரையும் உள்ளே விட மறுத்துவிட்டனர்.

"நாங்கள் தமிழக போலீஸ்.."

"யாராக வேண்டுமானால் இருங்கள். எங்களுக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. போதிய அரசு ஆவணங்கள் இல்லாமல் குற்றவாளிகளை விமானத்தில் ஏறவிட மாட்டோம்" என்று விடாப்பிடியாக இருந்தனர் விமான நிலைய அதிகாரிகள். அந்த ஊர் போலீஸாரும் உதவிக்கு வரவில்லை. சென்னை போலீஸார் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை. வேறு வழியின்றி சென்னை துணை கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சென்னை காவல்துறையினர் குற்றவாளியை அழைத்து வருவதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

சென்னை விமான நிலையத்தில் பலத்தப்பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்படுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து வரப்படுகிறார்.

இதற்கிடையே, "சாப்பிடலாம்" என அருகிலிருந்த ஹோட்டலுக்குச்  சென்றனர். 'சார், கைவிலங்கை நீக்குங்க...' என தஷ்வந்த் கெஞ்சவே, போலீஸார் செய்த மிகப்பெரிய தவறு, விலங்கை நீக்கியதுதான்.  அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் தன் அருகே அமர்ந்திருந்த இரு காவலர்களையும் கீழே தள்ளிவிட்டு, இடக்கையில் விலங்கோடு மின்னல் வேகத்தில் தப்பியோடினார் தஷ்வந்த். போலீஸார் எவ்வளவோ முயன்றும் குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை. ஏற்கெனவே குற்றவாளியைப் பிடித்த செய்திகேட்டு மகிழ்ச்சியில் இருந்தார் உதவி கமிஷனர் கண்ணன். ஆனால், திடீரென 'மீண்டும் குற்றவாளி தப்பிவிட்டான்' என்ற தகவலைக் கேட்டு அவர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் எரிச்சலடைந்தனர். "அங்கேயே இருங்கள். நான் மும்பை வருகிறேன்" என்று சொல்லி போனை வைத்தார் உதவி கமிஷனர். குற்றவாளி தப்பிய செய்தி பரவியதால், தமிழக காவல்துறைக்கு பிரஷர் மேல் பிரஷர். 'அய்யோ, கஷ்டப்பட்டதெல்லாம் வீணாப் போச்சே..' எனக் கண்ணீர்விட்டு அழாத குறையாகத் துடித்தனர் சென்னையிலிருந்து மும்பை சென்ற போலீஸார். இரவோடு இரவாக விமானம் மூலம் உதவி கமிஷனர் கண்ணன் மும்பை சென்றடைந்தார். இரவு முழுவதும் திட்டம் தீட்டப்பட்டது. 

டிசம்பர் 8-ம் தேதி காலை மீண்டும் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. சென்றமுறை, அவ்வளவாக உதவி செய்ய முன்வராத மும்பை காவல்துறை இந்த முறை தமிழக போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது. மும்பையின் அனைத்துச் சாலைகளிலும் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. 'பார்லே-வில்லா' இணை கமிஷனர் ஜெயக்குமார் குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக வாகனம் கொடுத்து, செக் போஸ்ட் அலர்ட் செய்து உதவி செய்தார். மீண்டும் தமிழக போலீஸ் மூன்று டீம்களாக பிரிந்து அங்கிருக்கும் ரேஸ் கோர்ஸ், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் எனத் தீவிரமாகத் தேடினர். எந்த போலீஸாருக்கும் அன்று முழுவதும் சாப்பிடுவதற்குக்கூட நேரம் இல்லை. அதிலும் சப்-இன்ஸ்பெக்டர் பொற்பாதம் ஆறு மணி நேரமாக ரயில் நிலையத்தில் லுங்கி கட்டிக்கொண்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டார். 

அன்று மாலை காலக்கோடா ரயில் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சார்லஸும், ஹெட் கான்ஸ்டபிள் மணிகண்டனும் குற்றவாளியைத் தேடிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ரயில்நிலையத்தின் 5-வது கவுன்ட்டரில் அடையாளம் தெரியாதபடி, தலைமுடியை வெட்டிக்கொண்டு, முகச்சவரம் செய்தும், கை-விலங்கைத் துணியால் மறைத்தவாறும் தஷ்வந்த் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்த இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஓடிச்சென்று தஷ்வந்தைப் பிடித்ததுடன், தப்பித்துச் செல்லாதவாறு கிடுக்கிப்பிடி போட்டுக் கட்டி உருண்டார். அங்கிருந்த மக்கள், ஏதோ சண்டை என நினைத்து இன்ஸ்பெக்டர் சார்லஸை அடிக்க வந்துவிட்டனர். "அவரை மரியாதையாக விடு" என்று மக்கள் கொந்தளித்தனர். "இவர் ஒரு கொலைக் குற்றவாளி; நாங்கள் தமிழக போலீஸ்" என சார்லஸ் தனக்கு தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் சொல்லி அடையாள அட்டையைக் காண்பிப்பதற்குள், ஹெட் கான்ஸ்டபிள் மணிகண்டனும் சம்பவ இடத்துக்கு வந்துவிட்டார். பின்னர் மக்களைச் சமாளித்து, அங்கிருந்த கயிறை எடுத்து தஷ்வந்தின் கையையும், காலையும் கட்டினார். 
குற்றவாளியைப் பிடிக்க மேற்கொண்ட ஒருவாரப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தேடுதல் வேட்டை போலீசார்களும், கைது செய்யப்பட்ட தஷ்வந்தும்.

தேடுதல் வேட்டை போலீசார்களும், கைது செய்யப்பட்ட தஷ்வந்தும்.

அதன்பின்னர் தமிழக போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக போலீஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இந்தமுறை விமான நிலையத்துக்குச் செல்லும்முன் தேவையான ஆவணங்களை தயார்ப்படுத்திக்கொண்டு சென்றனர் போலீஸார். அப்போதும் விமான நிலைய அதிகாரிகள், "குற்றவாளியை கை விலங்கோடு அழைத்துச் செல்ல முடியாது" என தீர்க்கமாகச் சொல்லிவிட்டனர். அதனால் வேறு வழியின்றி கை-விலங்கை நீக்கிவிட்டு, தஷ்வந்தின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, விமானத்தில் ஏற்றி பின்னர், பேன்ட்-பெல்ட்டால் கட்டி சென்னைக்கு அழைத்து வந்தனர். குன்றத்தூர் போலீஸாரின் இந்தத் துணிகரச் செயல்பாட்டை, ஒட்டுமொத்தக் காவல்துறையும் வாழ்த்தி வரவேற்றது. 

"ஹாசினி வழக்கில் சிறையிலிருந்து வெளிவந்த பின் குடும்பத்தார் என்னை மதிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் 'ஒரு குழந்தையின் உயிரைப் பறித்து விட்டாயே' எனச் சொல்லிச் சொல்லியே என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்கள். என்னை வீட்டைவிட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. செலவுக்குப் பணமும் தரவில்லை. அதனால் என் தந்தையைக் கொல்ல திட்டமிட்டேன். ஆனால், அன்றைய தினம் கோபத்தில் என் தாயைக் கொன்றுவிட்டேன்" என்று சென்னைக்கு அழைத்துவரப்பட்ட தஷ்வந்த் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது.

(7-ம் தேதி உதவி கமிஷனர் கண்ணன் மகளுக்கு நிச்சயதார்த்தம் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்ணன் அப்போது அவரது சொந்த ஊரான திருநெல்வேலியில் தனது மகளின் நிச்சயதார்த்த விழாவில் இருந்தார். மாலை வேளையில் பிடிப்பட்ட தஷ்வந்த் மீண்டும் தப்பித்த செய்தியைக் கேட்டு அதிர்ந்த கண்ணன் தன் உறவினர்களிடத்தில் 'ஒரு முக்கிய வேலையாக வெளியே செல்கிறேன். விழாவைக் கவனித்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டு நெல்லையிலிருந்து மதுரைக்கு வந்து, அப்போதே மதுரையிலிருந்து விமானம் மூலமாக மும்பைக்குச் சென்றார். அதேபோல எஸ்.ஐ. காண்டீபனுக்குக் குழந்தை பிறந்திருந்தது. அதனால் விடுப்பில் அவர் தன் மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் இருந்தார். இந்த நேரத்தில் தஷ்வந்தை பிடிக்க டீம் அமைத்தபோது விடுப்பை கேன்சல் செய்துவிட்டு தேடுதல் வேட்டைக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஒரு வழக்கில், குற்றவாளி கைது செய்யப்படுவதுதான், செய்தியாக வெளிவருமே தவிர, அதன் பின்னணியில் போலீஸார் படும்பாடு சொல்லி மாளாது என்பது, இதன் மூலம் தெரிய வருகிறது. போலீஸாரின் பணியைப் பாராட்டுவோம்...!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close