வெளியிடப்பட்ட நேரம்: 09:36 (21/02/2018)

கடைசி தொடர்பு:10:44 (21/02/2018)

கருணாநிதிக்கு அன்பு முத்தம்... ஸ்டாலினுடன் செல்ஃபி! - பாப்பாத்தி அம்மாளின் கனவு நிறைவேறியது 

பாப்பாத்தி பாட்டி

ஈரோட்டைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாளுக்கு தேநீர் விருந்து கொடுத்து, கருணாநிதியைச் சந்திக்கவைத்துள்ளார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.   

தி.மு.க மீது மிகுதியான விசுவாசம் கொண்டிருக்கும் பாப்பாத்தி அம்மாள், சமீபத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி பற்றிப் பேசிய வீடியோ அனைவராலும் பகிரப்பட்டது.  மு.க.ஸ்டாலினைக் காண பாப்பாத்தி அம்மாள் பலதடவை முயன்றும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டார் ஸ்டாலின். இந்நிலையில் நேற்று, பாப்பாத்தி  அம்மாளை சென்னைக்கு வரவைத்து, கருணாநிதியைக் காண வழிவகைசெய்துள்ளார் ஸ்டாலின்.

இதுகுறித்து ஸ்டாலின் தன் ஃபேஸ்புக் பக்கத்தில்...

“கழக நிர்வாகிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நிலையில், ஆர்வமிகு தொண்டர்கள் பலரும் கொள்கைப் பற்றுடன் அறிவாலயத்துக்கு வருகைதருகிறார்கள் என்பது குறித்து மடல் வாயிலாகத் தெரிவித்திருந்தேன். அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74வயது பாப்பத்தி என்ற அம்மையார், அறிவாலயத்துக்கு வந்ததையும், கழக நிர்வாகிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் இருந்ததால் என்னைக் காண முடியாமல் சென்றதாகவும் ஊடகங்களில் வெளியான செய்தியைக் கண்டு, கழக நிர்வாகிகள் வாயிலாக அந்த அம்மையாரை எனது வீட்டுக்கு அழைத்து, தேநீர் விருந்து அளித்ததுடன், தலைவர் கலைஞர் அவர்களிடமும் நேரில் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினேன். அந்த அம்மையார் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியும், அவரைப் போன்ற பயன்கருதா தொண்டர்களின் இயக்கப் பற்றுமே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நாளும் நாளும் வலு சேர்க்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். 

பாப்பாத்தி பாட்டி
 

மேலும், பாப்பாத்தி அம்மாளுடன் ஸ்டாலின் செல்ஃபி எடுக்கும் வீடியோவையும் தி.மு.க தொண்டர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

பாப்பாத்தி பாட்டி

 

கருணாநிதியைச் சந்தித்த பாப்பாத்தி அம்மாள், ‘அய்யா, நீங்கள் நூறாண்டு இருக்கணும், இவர் முதலமைச்சர் ஆவதைப் பார்க்கணும்’ என்று கண்ணீர் மல்கக் கூறினார். கருணாநிதியின் கைகளைப் பற்றி அன்பு முத்தமிட்டார். இந்தக் காட்சிகளைத் தி.மு.க தொண்டர்கள் ’அன்பின் அடையாளம்’ என்று பகிர்ந்துவருகின்றனர். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க