2 வருடங்களாக ஆதரவற்றுக்கிடந்த முதியவருக்கு வாழ்வளித்த சகாயம் ஐஏஎஸ் அமைப்பு!

சகாயம் ஐஏஎஸ்- முதியோர்

ஆதரவற்ற நிலையில் கிடந்த பெரியவர், சமையல் மேஸ்திரி முத்துவை, ஆவுடையார்கோயிலில் உள்ள முதியோர் காப்பகத்தின் நிர்வாகிகள், ஆதார் அடையாள அட்டை இல்லாமல் நேற்று சேர்த்துக்கொண்டார்கள். அதற்கான அரசாணையைப் பெற்று, முத்துவை காரில் அழைத்துச்சென்று காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தொடங்கிய 'மக்கள் பாதை' அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி என்ற ஊரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மண்டபம் பகுதியில், ரோட்டின் ஓரத்தில் பெரியவர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவற்றுக் கிடந்தார். அவர் பெயர், மேஸ்திரி முத்து. இதுகுறித்த செய்தியை நமது இணையதளத்தில் நேற்று வெளியிட்டிருந்தோம். வலையப்பட்டி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முத்துவை முதியோர் காப்பகத்தில் சேர்ப்பதென முடிவுசெய்து பொன்னமராவதி, ஆலங்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்படும் காப்பகங்களைத் தொடர்புகொண்டு, ' மக்கள் பாதை' அமைப்பினர் பேசியிருக்கிறார்கள்.

சகாயம் ஐஏஎஸ்- முதியோர்

காப்பக நிர்வாகிகளோ, 'ஆதார் கார்டு இருந்தால்தான் காப்பகத்தில் சேர்ப்போம்' என்று உறுதியாகக் கூறிவிட்டார்கள். முத்துவிடம் ஆதார் கார்டு இல்லை. உடனே அந்த அமைப்பின் உறுப்பினர் அழ.இளையராஜா என்பவர், மாவட்ட வருவாய் அதிகாரியைத் தொடர்புகொண்டு, முத்துவின் நிலைமையை விவரித்திருக்கிறார். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருக்கிறார். அவர், பொன்னமராவதி தாசில்தாரிடம் கூற, அவர், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய ராஜிடம் கூறியிருக்கிறார். அவர் உடனடியாக முத்துவை நேரில் சந்தித்து விசாரணைசெய்து, முத்துவின் தங்கையின் ஒப்புதலையும் பெற்று, ஆவுடையார்கோயிலில் செயல்படும் 'ரீக்கோ' என்ற முதியோர் காப்பகத்துக்குப் பரிந்துரைக் கடிதம் எழுதி, அதை 'மக்கள் பாதை' அமைப்பினரிடம் கொடுத்திருக்கிறார்.

சகாயம் ஐஏஎஸ்- முதியோர்

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை இளையராஜா நம்மிடம் விவரித்தார். 'கடிதம் கிடைத்ததும் அந்தக் காப்பக நிர்வாகியை போனில் தொடர்புகொண்டு விசயத்தைக் கூறினோம். 'நீங்கள் எப்போது வேண்டுமானாலும் முத்துவை அழைத்து வரலாம். எங்கள் காப்பகத்தில் சேர்த்துக்கொள்கிறோம்' என்று கூறினார்கள். உடனடியாக காரை ஏற்பாடுசெய்து, முத்துவை ஏற்றிக்கொண்டு எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஆவுடையார்கோயிலுக்குப் புறப்பட்டோம். போகிற வழியில் முத்துவுக்குத் தேவையான மாற்று உடுப்புகள், தண்ணீர், பிஸ்கட் வாங்கிக்கொண்டோம்.  காப்பக நிர்வாகியைச் சந்தித்து பரிந்துரைக் கடிதத்தைக் கொடுத்து, முத்துவை  ஒப்படைத்தோம். மத்திய அரசின் நிதி உதவிபெற்று இயங்கும் காப்பகம் என்பதால், முத்துவைப் பராமரிக்க மாதாமாதம் எந்தச்  செலவும் செய்யவேண்டியதில்லை. அவரை சேர்த்துவிட்டு இரவுதான் வீடு திரும்பினோம். காலையில் அந்தக் காப்பகத்துக்கு போன் போட்டு விசாரித்தேன். 'முத்து ரொம்ப வருடங்களுக்குப் பிறகு நிம்மதியாகத் தூங்கினார்' என்றார்கள். ஆதார் அட்டை இல்லாமல் சேர்க்க உதவிய அத்தனை அதிகாரிகளுக்கும் 'மக்கள் பாதை' அமைப்பின் சார்பாக நன்றி' என்றார் நெகிழ்வான குரலில்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!