வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (21/02/2018)

கடைசி தொடர்பு:13:45 (21/02/2018)

`பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குங்கள்' - ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாசலில் திருவோடு பானையுடன் விவசாயிகள் போராட்டம்!

விவசாயிகள்

மிழக விவசாயிகளுக்குக் கொடுக்கப்படவேண்டிய பயிர் காப்பீட்டுத் திட்டப் பணத்தை ஐ.சி.ஐ.சி.ஐ லாம்பார்டு வங்கி கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் கடந்த இரு தினங்களாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முன்பு போராட்டம் செய்துவருகின்றனர். 

2016-2017-ம் ஆண்டுக்கான வறட்சி மாவட்டங்ககளுக்கான பயிர் காப்பீட்டுத் திட்டப் பணத்தை இதுவரை விவசாயிகளுக்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி நிர்வாகம் கொடுக்க மறுத்துவருகிறது. கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை சுமார் ரூபாய் 600 கோடியை வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை. இதனால் சுமார் 25 முறைகளுக்கும் மேலாகக் கடலூரிலிருந்து விவசாயிகள் வங்கிக்கு வந்து காரணம் கேட்டுள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் வங்கி நிர்வாகம் தட்டிக் கழிக்கவே, இனி எங்களால் பொறுமை காக்க முடியாது என்று விவசாயிகள் வங்கியின் முன்பு அமர்ந்து போராடத் தொடங்கிவிட்டனர். கடந்த இரு தினங்களாக (20-02-2018, 21-02-2018)  நடந்துவரும் இந்தப் போராட்டத்தை முடித்து வைக்க வங்கி நிர்வாகம் விவசாயிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வரவில்லை. இதனால் இது மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் விவசாயிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.