"உண்மையான ஆன்மிகவாதியாக ரஜினியையே மக்கள் விரும்புகிறார்கள்"- தமிழருவி மணியன்! | People will like the true spiritualist Rajini, says tamilaruvi manian

வெளியிடப்பட்ட நேரம்: 13:46 (21/02/2018)

கடைசி தொடர்பு:13:46 (21/02/2018)

"உண்மையான ஆன்மிகவாதியாக ரஜினியையே மக்கள் விரும்புகிறார்கள்"- தமிழருவி மணியன்!

கமல்ஹாசன்

அவர் வருவாரா, மாட்டாரா? எப்போ வருவார் என்ற நிலையெல்லாம் மாறி, தமிழகத்தின் இரண்டு உச்சபட்ச நடிகர்களுமே அரசியல் களத்தில் குதித்துள்ளனர். கலைஞானியாகப்பட்ட கமல்ஹாசன், ஒருபடி மேலே போய், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்று, ராமேஸ்வரத்தில், கலாமின் குடும்பத்தினரைச் சந்தித்து விட்டு, அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டார். கலாம் நினைவிடத்திலும் கமல் மரியாதை செலுத்தினார். மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அறிவிக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தால் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பாதிக்கப்படுமா? ஜெயலலிதாவின் மறைவால் குழம்பிப் போயுள்ள தமிழக அரசியல் களத்தில், ரஜினிக்கான இடத்தை கமல்ஹாசன் தட்டிப்பறிப்பாரா என்பன போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அ.தி.மு.க, தி.மு.க என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கப்போகும் கட்சி எது என்பது பற்றியும், ரஜினியின் செல்வாக்கு பற்றியும் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியனிடம் கேட்டோம்.

தமிழருவி மணியன்

அவர் கூறுகையில், "ரஜினியும், கமலும் 40 ஆண்டுகளுக்கும் மேல் திரையுலகில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர்கள். இந்தச் சூழலில் ரஜினியின் படத்திற்கென்று இருக்கக்கூடிய பார்வையாளர்களும், கமல்ஹாசன் படத்திற்கான பார்வையாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேபோன்று கமல்ஹாசன் படத்திற்கு இருக்கக்கூடிய வரவேற்பை விட, ரஜினிகாந்தின் படத்திற்கு இருக்கக்கூடிய வரவேற்பும், வசூலும் எப்படி அதிகமோ, அதேபோலத்தான் இங்கே கட்சியாகப் பார்த்தாலும் கமலைவிட கூடுதலாக வாக்குவங்கி, வரவேற்பு எல்லாமே ரஜினிக்கு அதிகமாக இருக்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை. 

'கமல்ஹாசனைவிட ரஜினியின் அரசியல் பிரவேசம் தாமதம் ஏன்?' என்று கேட்கிறீர்கள். முயலும், ஆமையும் கதை அனைவருக்குமே தெரியும். அதுபோன்றதுதான் நான் சொல்லும் கருத்தும். எனவே, சந்தேகமே வேண்டாம். ரஜினிக்கான வாக்குகள் எப்போதும் இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள மக்கள், ரஜினியை படத்தில் மட்டுமே மனதளவில் ரசிக்கக்கூடியவர்கள் அல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துப் போற்றப்படுபவர். தமிழகம் முழுவதும் எந்த விருப்பும், வெறுப்பும் இல்லாமல் நீங்கள் மக்களைச் சந்தித்தால் உங்களுக்கு அந்த உண்மை புலப்படும். நடிகராக ரஜினிகாந்தை மக்கள் பார்த்ததே கிடையாது. அவர் ஒரு ஆன்மீகவாதி. அவர் எந்தவித போலிச் சார்பும் இல்லாதவர். ரஜினியின் தோற்றத்திலிருந்தே நான் சொல்கிறேன். 

ஒரு நடிகர் என்பவர் கடைசிவரை தன்னுடைய இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்குத்தான் முயற்சி எடுப்பார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். கடைசியாக அவர் மரணம் அடைந்து, அவரின் சடலம் கொண்டுசெல்லப்பட்டு, புதைகுழியில் வைக்கப்படும் வரையிலும் அந்தத் தோற்றத்தில் மாற்றம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். ஜெயலலிதாவும் அப்படித்தான். அதற்காகவே கடைசிவரை அவரை அப்படிக்காட்டினார்கள். 

ரஜினிஆனால், ரஜினி திரைத்துறையில் உச்சத்தில் இருக்கிற கட்டத்திலேயே தன் நரைச்ச முடியோட, நரைச்ச தாடியோட பொது நிகழ்ச்சிகள்ல ஒரு நடிகர் முன்வருவதானால், அதற்கு ஒரு தனிப்பட்ட பக்குவம் வேணும். அதற்கு ஒரு ஆன்ம பலமும், மனப்பக்குவமும் இருந்தாலோழிய அதைச் செய்ய முடியாது. ஒரு உச்சபட்ச நடிகராக இருந்து, முழுக்க முழுக்க ரஜினியின் ஸ்டைல் மற்றும் நடை, உடை, பாவனைகளாலேயே குழந்தைகளையும், மற்றவர்களையும் ஈர்த்தவர். அப்படிப்பட்ட நிலையில் திடீர்னு ஒரு வயதான தோற்றத்தில், நரைச்ச முடியோட வந்து நிற்கக்கூடியவர். அதனால எந்தப் போலித்தனமும், பொய்மையும் இல்லாமல் ஒரு உண்மையான மனிதனாக இருக்கக்கூடியவர் ரஜினி என்று மக்கள் நினைக்கிறாங்க. அதற்காக, நீங்கள், கமல்ஹாசனை போலியானவர் என்று சொல்லுவதாகக் கருதிவிடக்கூடாது. என் தாய் கற்பில் சிறந்தவள் என்று நான் சொல்வதாலேயே, ஊரில் உள்ள மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. 

ரஜினியைப் பொறுத்தவரை மனப்பக்குவமும், ஆன்மிக உணர்வும் உள்ளத்தில் இருந்தாலொழிய இயல்பான தோற்றத்தில் வெளியே வரமுடியாது. எனவே, அவரை நீண்டகாலமாக பார்த்துக் கொண்டிருப்பவர்கள், ரஜினி ஒரு உண்மை சார்ந்த மனிதன்; இவர் எந்த பொய்மையும், போலித்தனமும் இல்லாத மனிதன். ஆன்மிகத்தை மனதிற்குள் வைத்துக் கொண்டு, வாழ்க்கையை நடத்தக்கூடியவர். இமயமலைக்கு ஆண்டுதோறும் செல்வது, அங்கே தனியாக தியானம் இருப்பது, இப்படியாக அவரின் வாழ்வியல் முழுவதையும் பார்க்கக்கூடியவர்கள், அவரை தங்களில் ஒருவராக மனதளவில் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்ல, ரஜினியின் மீது அளவற்ற அன்பைச் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறாங்க. 

எனவே, எந்தவிதமான புதிய கட்சிகள் புறப்பட்டாலும் சரி, புதிய மனிதர்கள் புறப்பட்டாலும் சரி, ரஜினிக்கு என்று மக்கள் மனதில் இருக்கக்கூடிய அந்த மிகப் பெரிய மதிப்பையும், மரியாதையையும், எதிர்பார்ப்பையும் மாற்றிவிட எந்தச் சக்தியாலும் முடியாது.   

எதிர்காலத்தில் ரஜினி, கமல் இணைந்து அரசியலில் செயல்பட வாய்ப்பிருக்கிறதா என்பதை நான் சொல்ல முடியாது. அவர்கள் இருவரும்தான் அதுபற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் சேருவார்களா என்பதை, அவர்கள் சம்பந்தப்படாத வேறு எவரும் சொல்ல முடியாது. அவர்கள்தான் முடிவு பண்ண வேண்டும். கொள்கையளவில் இருவருக்கும் இடையில் சமரசமாக ஒரு இணக்கம் இருக்கலாம். ஒருவர் வடக்கிலும், இன்னொருவர் தெற்கிலும் பயணிப்பது உறுதி. இரண்டுபேரும் வைக்கக்கூடிய கொள்கைகளை முதலில் மக்கள் பார்ப்பாங்க. அதற்குப்பிறகு இந்த இரண்டுபேரையும் இணைப்பதற்கான சாத்தியக்கூறு இருக்கா இல்லையா என்பதை மக்களே தெளிவாக முடிவெடுப்பார்கள்.  

கமல், ரஜினியின் அரசியல் வருகையால் தி.மு.க-வின் எதிர்காலம் பாதிக்கப்படுமா என்பதல்ல இப்போதைய நிலை. ஜெயலலிதாவின் மரணமும், அ.தி.மு.க-வின் சரிவும் தி.மு.க-வின் வாக்குவங்கியை பலப்படுத்தியதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழக்கக்கூடிய அளவுக்கு தி.மு.க சென்றுவிட்டது. டி.டி.வி. தினகரன் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற்றார் என்று வைத்துக் கொண்டாலும்கூட, ஜெயலலிதா வேட்பாளராக நிற்கும்போதே 47,000 வாக்குகளைப் பெற்ற தி.மு.க., அண்மையில் தினகரன் நிற்கிற இடைத்தேர்தலில் 27,000 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை இழக்கிறது என்றால், அண்ணா தி.மு.க-வின் சரிவிற்குப் பிறகு அந்த இடத்தில் வந்து உட்கார வேண்டியது தி.மு.க-தான் என்று மக்கள் நினைக்கவே இல்லை. 
தமிழக மக்களைப் பொறுத்தவரை இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதும் சலிப்பு ஏற்பட்டிருக்கு. அவர்கள் ஒரு மாற்றத்தை ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மாற்றம் தரக்கூடிய மனிதர் யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அது ரஜினிகாந்த் என்பதுதான் தமிழருவி மணியன் கருத்து" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close