வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:03 (12/07/2018)

`2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழியைச் சிதைத்துவிட்டது தொல்லியல்துறை' - ஆய்வாளர்கள் ஆவேசம்

தொல்லியல்துறை

கரூர் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழியைத் தொல்லியல்துறை அதிகாரிகள் போற்றிப் பாதுகாக்காமல் உடைந்து, சிதையவிடுவதாக ஆய்வாளர்கள் குமுறுகின்றனர்.

கரூர் ஜவகர் பஜார் கச்சேரிப்பிள்ளையார் கோயில் அருகே நகராட்சிக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்தேக்கத் தொட்டி அமைப்பதற்காகக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குழி தோண்டி இருக்கிறார்கள். அப்போது, பெரிய அளவிலான ஆறு பானைகள், கோட்டை சுவர் செங்கற்கள், எலும்புத் துண்டுகள், இரும்புத் துண்டுகள் எனப் பொருள்கள் கிடைத்திருக்கின்றன. குழி தோண்டும்போது ஆய்வு மாணவர் செந்தில்அலட்சியமாக ஊழியர்கள் அந்தப் பானைகளைப் பாதியாக உடைத்துவிட்டனர். இந்த விஷயம் ஆய்வாளர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தெரியவர, அவர்கள் தொல்லியல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த தொல்லியல்துறை அதிகாரிகள் மற்றும் கரூர் தாசில்தார் குழி தோண்டுவதை நிறுத்தச் சொல்லிவிட்டு, பொருள்களை ஆய்வுக்காகச் சென்னைக்கு அனுப்பினர். மூன்று மாதம் ஆகியும் இதுபற்றி இன்னும் ரிசல்ட் வரவில்லை என்று தொல்லியல்துறை மழுப்புவதாகவும், இதுபற்றி மேற்கொண்டு ஆய்வு பண்ணாமல் அசட்டை காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய வரலாற்று முனைவர் பட்ட ஆய்வு மாணவர் செந்தில்,
 "இதெல்லாம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழியாகத் தெரிகிறது. ஆனால், இந்தப் பானைகளைப் பாதுகாக்காமல் உடைத்து ,சிதையவிட்டுக்கிட்டு இருக்கு தொல்லியல்துறை. அந்தப் பானைகள்ல ஒரு பானையில, பானைக்குள்ள பானை இருக்கிறாப்புல இருக்கு. இப்படிப்பட்ட பானையை அந்தக் கால மக்கள் கரூரில் மட்டும் தயாரித்த வரலாறுகூட கிடைக்கலாம். ஆனால், நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு இங்கே நீர்தேக்கத் தொட்டியை அமைக்க பார்க்குது. ஆனால், தொல்லியல்துறை மூன்று மாதங்களாகியும், 'சென்னையில் இருந்து இன்னும் ரிசல்ட் வரலை'ன்னு இந்தப் பழங்கால பொருள்கள் சம்பந்தமாக மேற்கொண்டு ஆய்வை மேற்கொள்ள எந்த முயற்சியையும் எடுக்கலை. விரும்பலைன்னே சொல்லலாம். எங்க ஆசிரியரோடு, ஆய்வு மாணவர்கள் நாங்க வந்து பண்ணிய ஆய்வில்தான், இது முதுமக்கள் தாழியா இருக்கலாம்ன்னு யூகிச்சுருக்கோம். இதுபற்றி, ஆய்வு பண்ண அக்கறை காட்டாத தொல்லியல் துறையைக் கண்டித்து தேவைப்பட்டால் போராடவும் தயாராக இருக்கிறோம்" என்றார் ஆக்ரோஷமாக!