`ஆலை அதிபர் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன்?' ஐ.டி அதிகாரிகள்மீது குடும்பத்தினர் பகீர்

ஐ.டி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாலேயே மன உளைச்சல் அடைந்து தற்கொலை செய்துகொண்டதாக அவரின் குடும்பத்தினர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் எஸ்.ஆர்.ரவியின் குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரு தினங்களாகச் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் நேற்று காலை தனது படுக்கையில் மயங்கி கிடந்த ரவியை, இவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ரவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவரின் மரணத்துக்கான காரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ஆலை அதிபர்

பட்டுக்கோட்டை நகர வர்த்தகச் சங்கத் தலைவரான ராமனுஜம் மற்றும் இவரின் மகன்களான எஸ்.ஆர்.ரவி, எஸ்.ஆர்.ராகவன் ஆகியோருக்குச் சொந்தமான எண்ணெய் ஆலை, எண்ணெய் விற்பனை நிலையம் ஆகியவற்றில் பிப்ரவரி 19-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டார்கள். இந்தச் சோதனை இரண்டாவது நாளாகப் பிப்ரவரி 20-ம் தேதியும் நீடித்தது. இந்நிலையில் 20-ம் தேதி காலை 9 மணியளவில் படுக்கையில் மயங்கிக் கிடந்த ரவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உடலில் விஷம் கலந்திருப்பதாக உடல்கூறு ஆய்வில் தெரிய வந்தது. வருமான வரித்துறையினர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டதாகவும் பொய்யான கணக்குகள் வைத்திருந்ததாக எழுதப்பட்ட காகிதத்தில் தன்னைக் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாலேயே மன உளைச்சல் அடைந்து இந்த முடிவை எடுப்பதாக ரவி கடிதம் எழுதி வைத்திருப்பதாக இவரின் குடும்பத்தினர் தெரிவிக்கிறார்கள். ரவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குக்கூட வருமானவரித்துறையினர் அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக வருமானத்துறை அதிகாரிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!