வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (21/02/2018)

கடைசி தொடர்பு:15:39 (21/02/2018)

'போலீஸை பகைத்துக்கொண்டால் இதுதான் கதி' - தி.மு.க. பிரமுகருக்கு நேர்ந்த கொடுமை 

விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், தன்னை சரமாரியாகத் தாக்கியதாக தி.மு.க. பிரமுகர் ரவிசந்திரன் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை, சின்னப்போரூரைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்துவருகிறேன். நான், தி.மு.க.வில் கடந்த ஓராண்டாகப் பணியாற்றிவருகிறேன். கடந்த 15.1.2018 ம் தேதி, என்னுடைய அலுவலகத்துக்கு வந்த எஸ்.ஆர்.எம்.சி. போலீஸார், என்னிடம் விசாரணை நடத்தினர். விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் என்னைக் கடுமையாகத் தாக்கினார். என்னுடைய இரண்டு செல்போன்களையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அங்கேயும் என்னை அடித்துத் துன்புறுத்தினர்.

அதன்பிறகு என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்போது, மாஜிஸ்ட்ரேட் நடந்த சம்பவத்தைக் கூறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று மிரட்டினார்கள். போலீஸார் தாக்கியதில் என்னுடைய விரல் உடைந்தது. அதற்கு சரிவர சிகிச்சைக்கூட அளிக்கவில்லை. போலீஸாரின் நடவடிக்கையால் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என்னைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

 இதுகுறித்து ரவிசந்திரனிடம் கேட்டபோது, "என் மீது தி.மு.க.வைச் சேர்ந்த விஜி என்பவரின் அம்மா தனம் புகார் கொடுத்ததாக போலீஸார் கூறுகின்றனர். அவரை நானும், என்னுடைய கூட்டாளிகளும் சேர்ந்து மிரட்டியதாகவும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் புகாரில் கூறியுள்ளார். ஆனால், இந்த வழக்கின் பின்னால் என்னுடைய அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் இருக்கின்றனர். தி.மு.க. சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறேன். இது, சிலருக்குப் பிடிக்கவில்லை. இதனால், என்னை திட்டம்போட்டு இந்த வழக்கில் சிக்கவைத்துவிட்டனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு காரில் வீட்டுக்குச் சென்றபோது, குடிபோதையில் சப்&இன்ஸ்பெக்டர் ஒருவர் அங்கு இருந்தார். அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அதற்கு என்னைப் பழிவாங்க இந்தப் புகாரை போலீஸார் பயன்படுத்திக் கொண்டனர். தற்போது, அந்த சப்&இன்ஸ்பெக்டர் வேறு போலீஸ் நிலையத்தில் பணியாற்றுகிறார். அவரும் இந்த வழக்கின் விசாரணையின்போது என்னை சரமாரியாகத் தாக்கினார். அப்போது 'போலீஸை பகைத்துக்கொண்டால் இதுதான் கதி' என்று போலீஸார் கூறினர். சிறையில் அடைக்கப்பட்ட நான், ஜாமீனில் வெளியில்வந்தேன். பிறகு 19.1.2018 ல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றேன். உடைந்த விரலின் காயம் இதுவரை குணமடையவில்லை. என்னைத் தாக்கியவர்கள் மீது மனித உரிமை ஆணையத்திடம் புகார் கொடுக்கவுள்ளேன். முன்னதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். நீதி கிடைக்கும்வரை போராடுவேன்" என்றார். 

 போலீஸார் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட ரவிசந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சின்னப்போரூரைச் சேர்ந்த தனம் கொடுத்த புகாரின்பேரில் அவரைக் கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட ரவிசந்திரன், அவரது கூட்டாளிகள் சரத், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்துள்ளோம். ரவிசந்திரன் சொல்வது போல நாங்கள் யாரையும் தாக்கவில்லை" என்றனர். 

 ரவிசந்திரன் மீதுள்ள வழக்கை தி.மு.க.வினர் யாரும் கண்டுகொள்ளவில்லையாம். மாறாக ரவிசந்திரனை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக பல புகார்கள் தலைமைக்குச் சென்றுள்ளன.