1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் புதிய பாடத்திட்டம் - செங்கோட்டையன் அறிவிப்பு! | New syllabus will release on april says education minister sengottaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (21/02/2018)

கடைசி தொடர்பு:16:40 (21/02/2018)

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் புதிய பாடத்திட்டம் - செங்கோட்டையன் அறிவிப்பு!

புதிய பாடத்திட்டம் வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

செங்கோட்டையன்

தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இதற்கான வரைவுப் பாடத்திட்டத்தைக் கடந்த நவம்பர் மாதம் 20-ம் தேதி வெளியிட்டு, பாடத்திட்டம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. தற்போது, பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணிகளில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் புதிய பாடத்திட்டம் வெளியிடப்படும். முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளின் பாடத்திட்டத்துக்கான குறுந்தகடுகள் வெளியிடப்பட்டுள்ளன. மத்திய அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் புதிய பாடத்திட்டங்கள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. இதேபோல் பல்வேறு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த அரசு செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க