`காலேஜ் வாசல்ல நிக்க முடியல; இப்படி பண்ணுறாங்க காங்கிரஸ்காரங்க'‍ - குமுறும் மாணவிகள் | Karur: College students complaints over congress's membership drive

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:40 (09/07/2018)

`காலேஜ் வாசல்ல நிக்க முடியல; இப்படி பண்ணுறாங்க காங்கிரஸ்காரங்க'‍ - குமுறும் மாணவிகள்

 காங்கிரஸ்

"ரோட்டுல, காலேஜ் வாசல்ல நிக்க முடியல சார். காங்கிரஸ்காரங்க கும்பலா வந்து, 'உங்ககிட்ட ஐ.டி கார்டு இருக்கா'ன்னு கேட்டு வாங்கி மளமளன்னு ஃபார்மை நிரப்பி, எங்ககிட்ட கையெழுத்து வாங்கி, 'இன்றுமுதல் நீங்க காங்கிரஸ் உறுப்பினர். விரைவில் உறுப்பினர் அட்டை வீடு தேடி வரும்'னு சொல்லிட்டு போறாங்க. நாங்க படிக்க வந்தோமா, இல்லை காங்கிரஸில் உறுப்பினராக வந்தோமா" என்று குமுறுகிறார்கள் கரூரைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள்.

வடிவேலும் சத்யராஜும் இங்கிலீஸ்காரன் படத்தில் கிரிக்கெட் டீமுக்கு ஆள் பிடிக்கும் கதைபோல, கரூர் மாவட்டத்தில் இப்படி தடாலடியாகக் கல்லூரி மாணவர்களைக் காங்கிரஸ் கட்சிக்கு உறுப்பினராக்கும் காரியத்தில் இறங்கியிருப்பது அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பேங்க் சுப்பிரமணியன்தான். இவரே, களத்தில் இறங்கி இப்படி உறுப்பினர் சேர்க்க, `கதையே வேற. உள்கட்சி பூசல், பதவி ஆசையால் இப்படி வேட்டியை மடிச்சுக் கட்டிட்டு அவரே களத்தில் இறங்க வேண்டிய சூழல்' என்று கூறுகிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

முதலில், கல்லூரி மாணவ, மாணவிகள் சிலரிடம் பேசினோம். "கடந்த ஒருவாரகாலமாகத்தான் இந்தக் கூத்து. பேருந்து நிலையம், சாலை, கல்லூரி வாசல்ன்னு கல்லூரி மாணவ, மாணவியர் கூடி நிற்கும் இடத்துக்கு பேங்க் சுப்பிரமணியன் கூட்டத்தோடு வந்து, 'பசங்களா, உங்ககிட்ட ஐ.டி கார்டு இருக்கா. கொண்டாங்க' என்று வாங்கி, மளமளவென்னு காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஃபார்ம்ல எங்களைப் பற்றி தகவல்களைப் புல்லப் பண்ணி, எங்ககிட்ட வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கி, 'சபாஷ், நீங்க இன்றுமுதல் காங்கிரஸ் கட்சி உறுப்பினராயிட்டீங்க'ன்னு சொல்லிட்டு போறாங்க. நாங்க படிக்க வந்தோமா, காங்கிரஸ் கட்சியில சேர வந்தோமா" என்று குமுறுகிறார்கள்.

இதுபற்றி பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், "ஆறு மாதம் முன்பு வரை இவர்தான் மாவட்டத் தலைவராக இருந்தார். ஆனால், `கரூரில் காங்கிரஸ் கட்சி சுத்தமா அழிஞ்சுட்டு. பேங்க் சுப்பிரமணியம் காசு சம்பாதிக்கிறதிலேயே குறியா இருக்கார்'ன்ணு தலைமையிடம் புகார் சொல்லிய காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, திருநாவுக்கரசர் மூலமா தன் ஆதரவாளர் சின்னச்சாமி என்பவருக்கு மாவடந்த் தலைவர் பதவி வாங்கிக் கொடுத்தார். இதனால், கோபமான பேங்க் சுப்பிரமணியன் சின்னச்சாமிக்கு அலுவலகம் கிடைக்க விடாமல் தடுப்பது, மாவட்டத் தலைவராக தானே செயல்படுவது என்று அட்ராசிட்டி பண்ணினார். இழந்த மாவட்ட தலைவர் பதவியைப் பெற சோனியா காந்தியை நாலைந்து முறை போய்ப் பார்த்துட்டு வந்தார். அதுக்கு தலைமை, 'யார் அதிகம் உறுப்பினர்கள் சேர்க்கிறீர்களோ அவர்களுக்குதான் பதவி'ன்னு சொன்னதா தெரியுது. அதனால்தான், தானே களத்தில் இறங்கி பதறி ஓடும் கல்லூரி மாணவர்களை இழுத்துப் பிடித்து நிறுத்தி உறுப்பினர்களாகச் சேர்த்துக்கிட்டு இருக்கார்" என்ற உண்மையைப் போட்டுடைத்தார்கள்.