`இது வேலைக்கு ஆகாது; அமைதி காக்கவும்' - நடுவழியில் தவித்த பயணிகளைக் கூல்படுத்திய ரயில்வே அதிகாரிகள்

ரயில் பயணிகள் கரூர்

பெங்களூரிலிருந்து நாகர்கோயில் செல்லும் விரைவு ரயில் இன்று காலை இயந்திரக் கோளாறு காரணமாக, கரூர் காந்திகிராமம் அருகே நிற்க, "போக்குவரத்துத்துறை அமைச்சர் மாவட்டத்துல வரும்போது ரயில்கூட பெயிலியர் ஆகிடுப்பா" என்று பயணிகள்  கமென்ட்  அடித்தனர்.

கரூர் டு நாகர்கோயில் செல்லும் விரைவு ரயில் இன்று காலை கரூர் வந்தது. கரூர் ஜங்ஷனில் பயணிகளை ஏற்றி இறக்கிக்கொண்டு கிளம்பிய, அந்த ரயில் காந்திகிராமம் அருகே செல்லும்போது, இயந்திரக் கோளாறு காரணமாகத் தண்டவாளத்தில் அம்போவென நின்றது. இதனால், பயணிகள் அதிர்ந்தனர். தகவல் அறிந்து வந்த கரூர் ஜங்ஷனில் உள்ள அதிகாரிகளும் பழுதுபார்க்கும் ஊழியர்களும் ரயில் இயந்திரத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு, 'இது வேலைக்கு ஆகாது. திண்டுக்கல்லில் இருந்து மாற்று இஞ்ஜின் எடுத்து வந்தபிறகுதான், இந்த ரயிலை மேற்கொண்டு இயக்க முடியும். அதுவரை பயணிகள் அமைதி காக்கவும்' என்று கூலாக சொல்ல, பயணிகள் அதிர்ந்து போனதோடு, கோபத்தின் உச்சிக்கே சென்றனர். இதனால், கரூர் டு திண்டுக்கல் வழித்தடத்தில் இயக்கப்படும் அத்தனை ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், அவசரமாகப் போக வேண்டிய சூழலில் இருந்த பயணிகள் புலம்பித் தவித்தனர்.

இந்நிலையில், சில பயணிகள், "தமிழக அரசுக்குச் சொந்தமான பேருந்துகள்தான் அடிக்கடி மக்கர் பண்ணும். பயணிகளை நடுவழியில் நின்னு தவிக்கவிடும். அந்தப் பேருந்துகளில் அநேகம் கரூரில் தயாரிக்கப்படுகின்றன. அதனால்தான், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க. சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசுப் பேருந்து கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்தது. அதனால், நாங்க ரயில் பயணத்தைத் தேர்ந்தெடுத்து, பயணிக்கிறோம். ஆனால், என்ன ராசியோ தெரியலை பெங்களூரிலிருந்து நல்லா வந்த இந்த ரயில், இப்படி கரூரில் நின்னுட்டு. போக்குவரத்து அமைச்சர் ஏரியா என்பதால், ரயிலும் பெயிலியர் ஆயிட்டுபோல' என்று கமென்ட் அடித்தனர்.

திண்டுக்கல் ஸ்டேஷனிலிருந்து மாற்று இஞ்ஜின் வர, இரண்டு மணி நேரம் தாமதாக ரயில் கிளம்பியது. இந்த ரயிலால் பாதிக்கப்பட்ட மற்ற ரயில்களும் தத்தமது ஊர்களுக்கு 'கூ..சிக்குபுக்கு' என்று விரைந்தன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!