வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (21/02/2018)

கடைசி தொடர்பு:18:47 (21/02/2018)

”பல் இல்லாத காவிரி நதிநீர் ஆணையம்.. துரோகம் செய்த தி.மு.க..” - கொதிக்கும் பா.ம.க

தி.மு.க. - பா.ம.க. தலைவர்கள்

2007-ம் ஆண்டு, கர்நாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது காவிரியிலிருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், கர்நாடகா 14.75 டி.எம்.சி அளவு கூடுதலாகத் தண்ணீர் எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரிப் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இறுதித் தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடகா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தலைவர் கருணாநிதி தமிழகத்துக்குப் பெற்றுத் தந்த உரிமைகளை, அ.தி.மு.க. அரசு இன்றைக்குப் பறிகொடுத்துவிட்டது. ஆகவே, தமிழகத்துக்கான காவிரி நீரின் அளவு குறைக்கப்பட்டு, தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “தி.மு.க. எந்தக் காலத்தில் காவிரி நீரைப் பெற்றுத் தந்தது.. உரிமையைப் பெற்றுத் தந்தது? காவிரி நடுவர் மன்றத்தின் இறுத்தீர்ப்புத்தான் 2007- ல் வந்தது. அதை, அரசிதழில் வெளியிட... அரசாணையைப் பெற்றுத்தரக்கூட இவர்களால் முடியவில்லை. மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அரசும், மாநிலத்தில் தி.மு.க-வும்தான் ஆட்சி செய்தார்கள். ஆனாலும், அரசாணையைக்கூடப் பெற்றுத்தர இயலாத அரசாகத்தான் இவர்கள் ஆண்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ். அதில், “டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1998 ஆகஸ்ட் 6-இல் நடைபெற்ற காவிரிப் பாசன மாநில முதல்வர்கள் கூட்டத்தில், தமிழக நலனைச் சமரசம் செய்துகொள்ளும் மத்திய அரசின் திட்டத்தை ஏற்றுக்கொள்ள கருணாநிதி மறுத்துவிட்டார். ஆனால், அந்தக் கூட்டத்துக்கு மறுநாள் பல மணி நேரம் நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையில் மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பணிந்த கருணாநிதி திருத்தப்பட்ட, அதிகாரமற்ற காவிரி ஆணையத்தை அமைக்க ஒப்புக்கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன்மூலம் தமிழக விவசாயிகளின் நலன் காவு கொடுக்கப்பட்டது. எனவே, காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது தி.மு.க அரசுதான். ஆனால், அது தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் அமைப்பாக இல்லாமல் உரிமை பறிக்கும் அமைப்பாக அமைக்கப்பட்டதுதான் கொடுமை” என்று தெரிவித்திருந்தார்.

கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன்

காவிரி விவகாரம் தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் பெரும் பங்கு குறித்து அறிக்கை வெளியிட்ட ராமதாஸுக்கு, தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தலைவர் கலைஞரை டாக்டர் இவ்வளவு கடுமையாக விமர்சிக்க என்ன காரணம் சொல்கிறார் என்றால்; குஜ்ரால் பிரதமராக இருந்தபோது நடுவர் ஆணையம் அமைக்க, சில யோசனைகளைச் சொன்னாராம். அதை, வாஜ்பாய் பிரதமராக வந்தபோது ஏற்காமல், இவர் வேறுமாதிரியான ஆணையத்தை அமைத்துவிட்டாராம். அதைக் கலைஞர் ஏற்றுக்கொண்டாராம். அதனால், தி.மு.க. துரோகம் செய்துவிட்டதாம். டாக்டர் அவர்களே... இந்தப் பிரச்னை நடைபெற்ற காலம் முழுவதும் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் உடனிருந்தவன் நான். காவிரி நான்கு மாநிலப் பிரச்னை. நான்கு மாநிலங்களின் ஒப்புதலோடு ஒரு முடிவுக்கு வந்தால்தான், அது நீடிக்கும். இல்லாவிட்டால், அது தொடர் பிரச்னையாகிவிடும். இவையெல்லாம் டாக்டர் அவர்களுக்குத் தெரியாதது அல்ல... 
டாக்டர் அவர்களே... தலைவர் கலைஞர் அவர்கள், காவிரிப் பிரச்னையில் கடந்த 50 ஆண்டுகளாக, ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, கவனம் செலுத்தாமல் இருந்ததே இல்லை. நடுவர் மன்றம் கொண்டுவர அவர் பட்டபாடெல்லாம் உங்களுக்குத் தெரியும். தெரிந்தும் எப்படி கலைஞர் காவிரிப் பிரச்னையில் துரோகம் செய்தார் என்று சொல்ல மனம் வந்தது? குறைகூற உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், பாடுபட்டவரை ‘துரோகி’ என்று அழைப்பது, எவ்வளவு பெரிய தவறு என்பதை தாங்களே நினைத்துப் பாருங்கள். நீங்கள் சொல்வதாலேயே காவிரிப் பிரச்னையில் கலைஞரின் செயல்பாடுகளை, ஈடுபாட்டினை இந்த நாடு மறந்துவிடாது. நாடு உங்கள் பக்கம் அல்ல... அது எங்கள் பக்கம். ‘திருவிளையாடல்’ படத்தில் தருமி, நக்கீரனிடம் சொல்வான். ‘அய்யா, பாட்டு எழுதியே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள்; பாடலில் குற்றம் கண்டுபிடித்தே வாழும் புலவர்களும் இருக்கிறார்கள். இதில் நீர் எந்த வகை’ என்பான். டாக்டர் அய்யா அவர்களே... இதில், நீங்கள் எந்த வகை?” என்று அதில் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, “காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த வலிமையான அமைப்பை உருவாக்குவதற்கு வாய்ப்பு இருந்தும், அதை இழந்துவிட்டு, பல் இல்லாத காவிரி ஆணையத்தை ஏற்றுக்கொண்டதன்மூலம் காவிரிப் பிரச்னையில் தி.மு.க. அரசு துரோகம் செய்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் குற்றம்சாற்றியிருந்தார். அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் நண்பர் துரைமுருகன் கொதித்தெழுந்திருக்கிறார். அவர் கொதித்தெழுந்தால் தி.மு.க. பக்கம் தவறு இருப்பதாக அர்த்தமாகும். ‘திருவிளையாடல்’ படத்தில் நக்கீரனிடம் தருமி பேசும் வசனத்தை சுட்டிக்காட்டி, மருத்துவர் அய்யா அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் பாட்டெழுதும் புலவரா, பாட்டில் பிழைகாணும் புலவரா’ என்று துரைமுருகன் வினா எழுப்பியிருக்கிறார். இந்த உதாரணத்தைச் சுட்டிக்காட்டியதிலேயே தி.மு.க-வின் பகுத்தறிவு பல் இளித்துவிட்டது என்றாலும், மருத்துவர் அய்யா அவர்களை ஆட்சியாளர்களின் குறைகளைச் சமரசமின்றிச் சுட்டிக்காட்டுபவர்  என ஏற்றுக்கொண்டதற்காகவும், தம்மை தருமி என்று ஒப்புக்கொண்டதற்காகவும் அவருக்கு நன்றி. பாட்டில் பிழையிருந்தால்கூட அதைக் கண்டுபிடித்து திருத்தலாம். ஆனால், நண்பர் துரைமுருகனின் செயல் தலைவர் எழுதும் பாடல்களே பிழையாக இருந்தால் என்ன செய்வது” என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

ஆக, காவிரி விவகாரத்தில் தி.மு.க-வுக்கும், பா.ம.க-வுக்கும் மோதல் தொடங்கியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்