`சொத்துக்காகப் பெண்ணைக் கடத்தி வைத்திருக்கிறார்' - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்மீது புகார்

சொத்துப் பரிவர்த்தனை விவகாரத்தில் பெண்ணைக் கடத்தி வைத்திருப்பதாகக் கரூர் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சாகுல் அமீது மீது கரூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட உறவினர்கள் புகார் அளித்துள்ளதோடு, பெண்ணை விடுவிக்கக் கோரி சாகுல் அமீது வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவும் செய்ததால், அந்தப் பகுதியே பரபரப்புடன் காணப்படுகிறது.

திருச்சி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வந்தவர்கள் ராமகிருஷ்ணன், ஆறுமுகம் சகோதரர்கள். இவர்களின் மனைவியர்கள் முறையே விஜயலட்சுமி, சித்ரா. கடந்த 9 மாதத்துக்கு முன்பு ராமகிருஷ்ணன் மற்றும் அவரின் சகோதரர் ஆறுமுகம் உடல் நலம் குன்றி அடுத்தடுத்த வாரத்தில் காலமாகிவிட்டனர். இவர்களுக்குச் சொந்தமான பழக்கடை உள்ளிட்ட சொத்துகள் சுமார் 4 கோடி மதிப்புடையது எனத் தெரிகிறது. சொத்துக்குப் பாத்தியப்பட்ட இருவரும் இறந்துவிட்டதால், அவர்களின் வாரிசுகளான விஜயலட்சுமியும் சித்ராவும் பங்கு பரிவர்த்தனை செய்துகொள்ள முடிவு செய்தனர். விஜயலட்சுமியின் தாய்வீடு கரூர் என்பதால், அவர் தந்தையின் நண்பரான முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் சாகுல் அமீது கடந்த சில மாதங்களாக இந்தச் சொத்துப் பிரச்னை சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சாகுல் அமீது மகன் சேக் பரீத் கரூர் நகராட்சி வழக்கறிஞராக உள்ளதால், அவர் மூலம் சட்ட ஆலோசனைகளைப் பெற்று சொத்து பரிவர்த்தனையில் சாகுல் அமீது ஈடுபட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய உறவினர்கள், "இந்தச் சொத்தை மற்றொருவருக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் எனப் பேரம் பேசி அட்வான்ஸாக ரூபாய் 35,00,000 சாகுல் அமீது பெற்றுள்ளார். இதனால், 'விஜயலட்சுமியையும் அவரது பாதுகாப்பிலேயே வைத்துக்கொண்டு அனுப்பவில்லை' எனச் சித்ரா திருச்சி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒரு மாதத்துக்கு முன்பு புகார் அளித்துள்ளார். புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், விஜயலட்சுமியின் வளர்ப்புத் தாய் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நேற்று காலமாகி விட்டார். அதனால், இன்று அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விஜயலட்சுமியை சாகுல் அமீதிடமிருந்து விடுவிக்க வேண்டும்' எனக் கூறி கரூர் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்த சித்ரா மற்றும் அவரின் உறவினர்கள். சாகுல் அமீது வீட்டின் முன்பு, 'விஜயலட்சுமியை விடுவிக்கும்வரை விடமாட்டோம்' எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவ, கரூர் நகரக் காவல்நிலையப் போலீஸார் வந்து பிரச்னையைச் சுமுகமாக்கினர். விஜயலட்சுமியையும் மீட்டுக்கொண்டு போய் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!