வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (21/02/2018)

கடைசி தொடர்பு:21:00 (21/02/2018)

நக்சல் அமைப்பில் செயல்பட்ட மூன்று பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்..!

நக்சல் அமைப்பில் செயல்பட்டுவந்த மூன்று பேர் திருவள்ளூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். 

திருவள்ளூரில் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்ட நக்சல் அமைப்பில் செயல்பட்டுவந்த தசரதன் அவரின் மனைவி செண்பகவள்ளி தசரதனின் அண்ணன் வெற்றி வீரபாண்டியன் ஆகிய மூவரும் இன்று அந்த மாவட்ட செசன்சு நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். திருவள்ளூர் டி.எஸ்.பி புகழேந்தி மேற்படி நபர்களைப் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு செய்தார்.

அந்த மனு மீதான விசாரனை இன்று மதியம் 1.45 மணிக்கு தொடங்கியது. விசாரணை 3.00 மணிவரை நடைபெற்றது. உணவு இடைவேளைக்குப் பின்னர், மதியம் 3.30 மணிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மீண்டும் 3.45 மணிக்கு தொடங்கிய விசாரணை 4.10 மணி வரை நீடித்தது. போலீஸ் காவல் வழங்கப்படுவது குறித்து மாலை 5.15 மணிக்கு உத்தரவு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது தமிழகம் முழுவதும் வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே, அவர்களை விசாரிக்க 10 நாள்கள் அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார். தசரதன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ்பாபு தசரதனை 36 மணி நேரம் சட்ட விரோதமாக அடைத்து வைத்து விசாரணை செய்தனர். சம்பந்தப்பட்ட தசரதன்மீதோ அவரின் மனைவி கோதரர்மீது எந்த வழக்குகளும் இல்லை. அவர்மீது எந்த வழக்குகளும் இல்லை என்று கியூ பிரிவு போலீஸார் தெரிவித்துவிட்டனர். அதன் பிறகு, போலீஸ் காவல் தேவையில்லை என வாதிட்டார். மூன்று நாள்கள் வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்படும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.

முன்னதாக நீதிமன்றத்துக்குள் வரும்போது கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் மை பிடிக்கும் கைகளே உண்மையை அறிந்திடுக உண்மையை மட்டுமே எழுதிடுக எனக் கோஷம் எழுப்பினார்கள்.