கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றுனது குத்தமா? போலீஸை மிரளவைத்த கும்பல் | Fake Note gang busted in Karur

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (21/02/2018)

கடைசி தொடர்பு:14:58 (09/07/2018)

கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றுனது குத்தமா? போலீஸை மிரளவைத்த கும்பல்

"பிரதமர் 500,1000 பணத்தாள்கள் செல்லாதுன்னு அறிவிசப்ப, பல கோடீஸ்வரர்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே செல்லுற நோட்டுகளாக மாத்திக்கிட்டாங்க. நாங்க கள்ள நோட்டை மாத்தினது மட்டும் பெரிய குத்தமா?" என்று கள்ள நோட்டு மாற்றிய கும்பல் கேள்விக் கேட்க, போலீஸார் அதிர்ந்தனர்.


கரூர் மாவட்டம், புலியூரில் மூன்று பேர் 2,000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்றுள்ளனர். அவை கள்ளநோட்டுகள் என்பதை உணர்ந்த அந்தக் கடை உரிமையாளர், அவர்களை வளைத்து பிடித்ததோடு, பசுபதிபாளையம் காவல்நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் அவர்கள் மூவரையும் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு ஸ்டேஷனுக்குச் சென்றனர். அவர்களிடமிருந்து ஐந்து 2,000 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் கைப்பற்றினர். போலீஸார் விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் கரூர் மற்றும் வெங்கமேடு பகுதிகளைச் சேர்ந்த முருகன், உதயகுமார், சத்தியசீலன் என்பது தெரிந்தது. ஆனால், மூவரும் அந்தப் பகுதி முக்கியப் புள்ளி ஒருவருக்கு வேண்டியவர் என்ற தகவலும் போலீஸாருக்குக் கிடைத்திருக்கிறது.

அதோடு, அந்த முக்கியப் புள்ளியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் அடித்து, 'அவர்கள் மூவர் மீதும் பெரிய அளவில் கேஸ் போட வேண்டாம்' என்று பிரஷர் வந்ததாம். இதனால், கையைப் பிசைந்த போலீஸார், இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்தும், இன்று காலை வரை மீடியாவிடம் மூச்சு விடாமல் பாதுகாத்து, மேற்படி விவகாரத்தை உப்புச்சப்பில்லாமல் செய்ய பார்த்திருக்கிறார்கள். ஆனால், இந்தக் கள்ள நோட்டு சமாசாரம் எப்படியோ இன்று மீடியாவுக்குக் கசிய, ஆளாளுக்கு போலீஸ் ஸ்டேஷன் போன் போட்டு கேட்க, வேறு வழியில்லாமல் கள்ள நோட்டு மாற்ற நடந்த குற்றச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்கள். ஆனால், அந்த மூவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையைக் குறைவாகச் சொல்லி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அசராத அந்த மூன்று குற்றவாளிகளும் போலீஸாரிடம்,"பிரதமர் 500,1000 பணத்தாள்கள் செல்லாதுன்னு அறிவிச்சப்ப பல கோடீஸ்வரர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செல்லாத நோட்டுகளை செல்றதா மாற்றினாங்க. நாங்க கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றுனது மட்டும் பெரிய குத்தமா?" என்று கேட்க,முழிபிதுங்கி போயிருக்கிறது போலீஸ்!.