``ஊட்டி ரோஜா பூங்காவில் அலைமோதும் கூட்டம்!’’ - கோடை சீசனுக்காகத் தயாராகும் பூங்காக்கள்

ஊட்டி ரோஜா பூங்காவில் கூட்டம் அலைமோதும் நிலையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பூங்காக்களும் தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரோஜா பூங்கா

ஆண்டுதோறும் கோடை விடுமுறையைக் கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வருவது மலைப்பகுதிகளுக்குத்தான். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர அனைத்துத் துறையினரும் சீசனை எதிர்ப்பார்த்து அதற்கான ஆயத்த பணிகளை முடுக்கிவிட தொடங்கியுள்ளனர். சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் ரோஜா பூங்காவில், செடிகளை கவாத்து செய்யும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், “கடந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை ஊட்டி  பூங்காவுக்கு 9 லட்சத்து 57 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். இந்த நிதியாண்டில் பிப்ரவரி 20 ம் தேதி வரை 10 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அதே போல தாவரவியல் பூங்காவுக்கு இதுவரை 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். 

ஆண்டு தோறும் அரசு சார்பில் பூங்கா பராமரிப்புக்காக ரூ.1 கோடியே 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும். அதன் மூலம் பூங்கா பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பூங்காவில் செடிகள் கவாத்து செய்யும் பணி நடந்து வருகிறது, மண்ணைக் கிளறி உரமிடும் பணியும், பயிர் பாதுகாப்புப் பணிகள் நடைபெறும். தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் கூட, லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வரும் ஏப்ரல் 15 ம் தேதிக்குள் பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்கத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கிறோம். தற்போது நடந்து வரும் ரோஜா பூங்கா பராமரிப்புப் பணி ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். அதைத்தொடர்ந்து புல் வெளிகளை பராமரிக்கும் பணி தொடங்கும். மேலும், மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் தமிழகம் மாளிகை பூங்கா ஆகியவற்றை தயார் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. தாவரவியல் பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பாத்திகள் மற்றும் தொட்டிகளில் நடவு செய்யும் பணிகள் நடக்கிறது'' என்றார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!