வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (21/02/2018)

கடைசி தொடர்பு:19:20 (21/02/2018)

ஆங்கிலம் பேசும் பழங்குடியினக் குழந்தைகள்! - கடலூரைக் கலக்கும் அரசுப் பள்ளி ஆசிரியை

பழங்குடியின மாணவர்களை ஆங்கிலத்தில் பேச வைத்து அசத்திக்கொண்டிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர். ' ஊசி, பாசி விற்கும் பெற்றோரின் குழந்தைகள் ஆங்கிலம் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுடைய மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழியாகவே ஆங்கிலத்தைப் படிக்க வைத்தேன்' என நெகிழ்கிறார் ஆசிரியை. 

கடலூர் மாவட்டம், பெண்ணாடம்(மேற்கு) பகுதியில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. முழுக்க ஊசி, பாசி விற்கும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் நிரம்பியுள்ள பகுதி இது. இந்தப் பள்ளிக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியையாக வந்தார் கீதா சதீஷ். தொடக்கத்தில் பல சவால்கள் அவருக்குக் காத்திருந்தன. பல நாடோடிக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே விரும்பவில்லை.

அவர்களது பெற்றோருக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கி, அந்தக் குழந்தைகளை வகுப்பறைக்குள் வரவைத்தார். அடுத்ததாக, ' நகரத்தில் படிக்கும் குழந்தைகளைப் போல, அவர்களும் ஆங்கிலம் கற்க வேண்டும்' என விரும்பினார். ஆனால், அவ்வளவு எளிதாக அது சாத்தியமாகவில்லை. இதன்பின்னர் நடந்த விஷயங்களை நம்மிடம் விளக்கினார் கீதா. 

" மருத்துவம் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தொடக்ககால கனவாக இருந்தது. ஆனால், மருத்துவ நுழைவுத் தேர்வில் ஐந்து மதிப்பெண் குறைந்ததால், மருத்துவம் படிக்க முடியாமல் போய்விட்டது. எனவே, ஆசிரியர் பணியைத் தேர்வு செய்தேன். மாணவர்களை அதிக மதிப்பெண் பெற வைப்பது பிரதான கடமையாக இருந்தாலும், அவர்களுடைய மொழி அறிவை வளர்க்க வேண்டியது கட்டாயம் எனக் காலப் போக்கில் உணர்ந்தேன்.

என்னுடைய வகுப்பைச் சேர்ந்த மாணவன் ஒருவன், சத்துணவு வாங்கும் வரிசையில் நின்றிருந்தான். உணவுத்தட்டு கூட இல்லாமல் ஒரு தேக்கு மர இலையைப் பறித்து உணவு வாங்கிச் சென்றான். உணவின் சூடு பொறுக்க முடியாமல், அவனது கண்கள் கலங்கியதைக் கவனித்தேன். உடனடியாக எனது வகுப்பு மாணவர்களுக்கு டிபன் பாக்ஸ் வாங்கித் தந்தேன். இங்கு படிக்கும் மாணவர்களில் பலரும் பழங்குடியின மற்றும் நாடோடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள். கோவில் திருவிழா காலங்களில் ஊசி, பாசி விற்கவும் சோதிடம் பார்க்கவும் குடும்பத்துடன் சென்றுவிடுவர். அதனால், மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்திருந்தது. 

இந்த விகிதத்தைக் குறைப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. 100 சதவிகிதம் வகுப்பறைக்கு வரும் மாணவர்களுக்கு மாதம் ஒருமுறை பரிசு வழங்கி வருகிறேன். இந்தப் பரிசை வாங்குவதற்காக வகுப்பறைக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நான் நினைத்ததுபோலவே இடைநிற்றல் பெருமளவு குறைந்துவிட்டது. அடுத்ததாக, மாணவர்களிடம், 'பாத்திரமேற்று நடித்தல்' எனும் முறையைச் செயல்படுத்தியுள்ளேன். பாத்திரமேற்று நடிக்கும் போது, எளிதில் பாடங்களை உள்வாங்கிக் கொள்கின்றனர். படிப்பின் மீது அவர்களுக்கு இருந்த பயம், முற்றிலும் அகன்றுவிட்டது.

இதையெல்லாம்விட, ஆங்கிலம் கற்பது அவர்களுக்குப் பெரும் பிரச்னையாக இருந்தது. எத்தனை வகுப்புகள் எடுத்தாலும், அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களுடைய மொழியை நான் கற்றுக்கொண்டேன். இப்போது அவர்களுடைய மொழியிலேயே பாடம் நடத்துகிறேன். இந்த முயற்சியால், மாணவர்கள் எளிதாகப் பாடங்களை கற்றுக்கொள்ளவும் ஆங்கில மொழியைச் சரளமாகப் பேசவும் தொடங்கிவிட்டனர்" என்றார் உற்சாகத்துடன்.