லஞ்சத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த பேனரால் ஏற்பட்ட பரபரப்பு..! | CPM party create sensation about bribe issue

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (21/02/2018)

கடைசி தொடர்பு:10:55 (22/02/2018)

லஞ்சத்துக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்த பேனரால் ஏற்பட்ட பரபரப்பு..!

கரூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் '2,000' என்று போடப்பட்ட பேனரை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வைத்தனர். அதற்கு என்ன அர்த்தம் என்று பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கரூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் 2,000 என்று எண் போடப்பட்ட பேனர் ஒன்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டது. அந்தப் பேனர் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எந்தக் காரணத்துக்காக பேனர் வைக்கப்பட்டது என்று யாருக்கும் தெரியாததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்தநிலையில், அந்த பேனரை வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் எடுத்துவிட்டனர். தற்போது மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடம் கேட்டபோது, 'அரவக்குறிச்சி தாலுக்கா ஆபீஸில் தொட்டதுக்கெல்லாம் லஞ்சம்தான். தாசில்தார், டி.எஸ்.ஓ தொடங்கி சாதாரண பியூன் வரை, 'காசை வெட்டு; காரியத்தை முடி' என்று ஓப்பனாக மக்களிடம் பேசும் அளவுக்கு மோசமாக இருக்கிறது. இந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளப்பட்டி பேரூராட்சி, 50,000 மக்கள் தொகை கொண்ட பெரிய பேரூராட்சி. அங்குள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் அட்டை இல்லை.

இதனால், அவர்கள் அரசு வழங்கும் எந்தச் சலுகையையும் பெறமுடியாமல் அல்லாடி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கூலி வேலை பார்க்கும் தினக்கூலிகள். இவர்களைப் பற்றி ஜூனியர் விகடனில் செய்தி வெளி வந்ததையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ், பள்ளப்பட்டியில் டி.எஸ்.ஓ குமரேசன் மூலமாக முகாம் போட வைத்து ரேஷன் கார்டு பிரச்னையைத் தீர்க்க வழிவகை செய்தார். ஆனால், அந்த முகாமில் விண்ணப்பித்தவர்களில் பாதி பேருக்கு மட்டும் ரேஷன் கார்டு பிரச்னைகளைத் தீர்த்த டி.எஸ்.ஓ, மீதவுள்ளவர்களிடம், ஒரு நபருக்கு 2000 ரூபாய் கொடுத்தால்தான் ரேஷன் கார்டு' என்று கூசாமல் கேட்டிருக்கிறார்.

நூறு, இருநூறுக்கே வழியில்லாத அந்த மக்களால் 2,000 ரூபாய் பணத்தை எப்படி தர முடியும்? எங்களிடம் விசயம் வந்ததும், தாசில்தார் தொடங்கி, டி.எஸ்.ஓ வரை லஞ்சம் வாங்குவதை வெளிப்படுத்த இப்படி பெரிய அளவிலான அட்டையில் '2000' சி.பி.எம்(ஐ) ன்னு மட்டும் எழுதி, கடந்த 19 ம் தேதி அரவக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தின் முன்பு வைத்துவிட்டோம். இதனால், பரபரப்பாகி,' 2000 ன்னா என்ன அர்த்தம்?'ன்னு எங்களை மக்கள் கேட்டு துளைச்சு எடுத்துட்டாங்க. 


அதுக்கு பதில் சொல்லாம, தூத்துக்குடி மாநாட்டுக்குப் போய்ட்டு, இன்னைக்குதான் ஊருக்கு வந்தோம். வந்து பார்த்தா, அந்த 2,000 அட்டையை காணவில்லை. அரவக்குறிச்சி காவல்நிலையத்துல கேஸ் கொடுத்தோம். உடனே, தாசில்தார் சந்திரசேகர், தான்தான் அதை கழட்டி வைத்திருப்பதாகச் சொன்னார். அதோடு, அமைதிப் பேச்சுவார்த்தைக்குக் கூப்பிட்டார்கள். நாங்கள் அதுக்கு, 'அந்தத் தட்டியை மறுபடி இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு பேச்சுவார்தைக்குக் கூப்பிடுங்கள் என்று சொன்னோம். அதுக்கு மறுத்துட்டாங்க. நாங்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க யோசிச்சுகிட்டு இருக்கோம்' என்று தெரிவித்தார்.