ஊட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது..!

ஊட்டியில் தொடர் வழிப்பறி, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் குளு குளு சீதோஷ்ண நிலை இருப்பதால், இங்கு வசிக்கும் மக்கள் மாலை 6:00 மணியளவில் வீடுகளுக்குள் அடைந்து விடுகின்றனர். இதனால் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது நீலகிரி மாவட்டத்தில் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ஊட்டி டவுன் மற்றும் லவ்டேல், பைகமந்து, பாலடா உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்தும், ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி என சுமார் 40 இடங்களில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் நடந்துவந்தன. 

இந்தச் சம்பவங்களில் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா உத்தரவின் படி டி.எஸ்.பி சங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க டி.எஸ்.பி சங்கு மேற்பார்வையில், புறநகர் காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இதுகுறித்து ஊட்டி புறநகர் காவல் ஆய்வாளர் விநாயகம் கூறுகையில், “குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் தனிப்படை நடத்திய விசாரணையில், சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, 3 நபர்கள் சந்தேகம்படும்படி வந்து சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து, பழைய குற்றவாளிகளை விசாரணை செய்து வந்த நிலையில், ஊட்டி டவுன் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த, வெல்பேக் எஸ்டேட், அண்ணாநகர், வல்டேல் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன், ராஜாவைப் பிடித்து விசாரித்தபோது அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஊட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வீடுகளில் புகுந்து திருடியதையும், வழிப்பறி செய்ததையும் ஒப்புக் கொண்டான். மேலும், அவன் அளித்தத் தகவலை வைத்து கூட்டாளி கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த துரைசாமி மகன் மணிகண்டன் கைதுபட்டான். அவனிடமிருந் 13 பவுன் நகை, 10 வெள்ளிக் காசுகள் மற்றும் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களுடன் சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ராஜசேகரன் ஏற்கெனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!