சட்ட ஆலோசனை கேட்டு சைலன்ட் ஆன தங்கத்தமிழ்ச்செல்வன்.!

தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் ஆலோசனைக் கூட்டத்தில் காட்டமாகப் பேசினார் துணை முதல்வர் பன்னீர்செல்வம். டி.டி.வி தினகரன், தங்கத்தமிழ்ச்செல்வன் இருவரையும் தொடர்ச்சியாக வறுத்தெடுத்தவர், ’கடந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு மட்டுமல்லாமல், தங்கத்தமிழ்ச்செல்வன், ஜக்கையன், கதிர்காமு என மூவருக்கும் மொத்த செலவும் நான்தான் செய்தேன். கவுன்டிங் வரை நான்தான் செலவு செய்தேன்’ என்று பேசினார். இதனை அறிந்த தங்கத்தமிழ்ச்செல்வன், பன்னீர்செல்வம் பேசிய அந்த வீடியோவை வைத்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க இருப்பதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது.

பன்னீர்செல்வத்தின் மீது எப்படிப் புகார் கொடுக்கலாம் என்று தனது சட்ட ஆலோசகர்களிடம் பேசியிருக்கிறார். ‘தேர்தல் முடிந்த ஆறு மாதத்திற்குள் மட்டுமே தேர்தல் தொடர்பான சச்சரவுகளுக்கு நீதிமன்றத்தில் முறையிட முடியும். மேலும், தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கச் சென்றால், நீங்கள் போலியான செலவுக் கணக்கு தாக்கல் செய்தீர்களா? என்று நமக்கு எதிராக தேர்தல் ஆணையம் திரும்பவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே கட்சியின் சின்னம் தொடர்பாக டி.டி.வி தினகரன் சிக்கலில் சிக்கிக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதனைக் கேட்டு சைலன்ட் ஆகிவிட்டாராம் தங்கத்தமிழ்ச்செல்வன். கூட்டத்தில் என்ன நடக்கிறது? பன்னீர்செல்வம் என்ன பேசுகிறார்? என்று பார்க்க அனுப்பப்பட்ட தனது கட்சி உளவுத்துறையிடம் இதனை சொல்லி புலம்புவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!