குற்றாலம் பார்டர் பரோட்டா கடையில் வருமானவரிச் சோதனை..!

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரபலமான பரோட்டா கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரி ஏய்ப்புச் செய்ததாகக் கிடைத்தத் தகவலையடுத்து இந்தச் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள செங்கோட்டை பார்டர் பரோட்டா கடை மிகவும் பிரசித்தி பெற்றது. சீசன் சமயத்தில் குற்றாலத்துக்குக் குளிக்கச் செல்பவர்கள் இந்தக் கடையில் பரோட்டா மற்றும் நாட்டுக் கோழி சாப்பிடுவதையும் தங்களது பயணத் திட்டத்தில் சேர்க்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

இந்தக் கடையின் உரிமையாளர், செங்கோட்டையை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த ரஹ்மத். இவர் வருமான வரி செலுத்துவதில் முறைகேடு செய்ததாக  வருமானவரித் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாலையில் இரு குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

வருமான வரித்துறையின் ஒரு குழுவினர் பரோட்டா கடையில் சோதனை நடத்தினர். மற்றொரு குழுவினர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். 

இந்தச் சோதனையின்போது, சமீபத்தில் அவர்கள் வாங்கிய சொத்து தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரோட்டா கடையில் வருமான வரித்துறை சோதனை நடத்திய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!