சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி சேலம் நீதிமன்றத்தில் சரண்..!

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன், சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சினிமாவை விஞ்சும் அளவுக்கு பிரபல ரவுடி பின்னி என்கின்ற பினுவின் பிறந்தநாள் விழா, மது, மாமிசத்தோடு சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில், 100-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கலந்துகொண்டார்கள். அதையடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், கூண்டோடு ரவுடிகள் கைதுசெய்யப்பட்டார்கள். இந்நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதா என்கின்ற ராதாகிருஷ்ணன் தன் வழக்கறிஞரோடு சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அதையடுத்து, அவர் சேலம் மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் தமிழ்ராஜா கூறுகையில், ''சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராதா என்கின்ற ராதாகிருஷ்ணன். இவர்மீது சென்னையில் உள்ள காவல்நிலையங்களில் 9-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ரவுடி பினுவின் பிறந்த தின விழாவை, ரவுடிகள் கூடிக் கொண்டாடினார்கள். அந்தக் கும்பலிலிருந்து இவர் வேறுபட்டிருக்கிறார்.

 அந்தப் பிறந்தநாள் விழா கொண்டாட்டமே, ராதாவை கொலை செய்வதற்காகக் கொண்டாடியிருக்கிறார்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. காவல்துறையினரே கூறியிருக்கிறார்கள். அன்று, ராதாவுக்கு உடல்நிலை சரியில்லாததால், அந்த விழாவுக்குப் போகவில்லை.

ராதாவின் உயிருக்கு சென்னை காவல்துறையினராலும், சென்னையைச் சேர்ந்த ரவுடிகளாலும் ஆபத்து இருந்தது. அதன் காரணமாகவும், சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷன் என்பவரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக ராதா இருந்துவந்தார். அந்த வழக்கிற்காகவும் இன்று சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்'' என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!