லாரி மோதி இரண்டாக உடைந்த திருச்செந்தூர் முருகன் கோயில் தூண்..!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் வழியில், சந்நிதி தெருவில் உள்ள மண்டபத் தூண், லாரி மோதியதால்  இரண்டு துண்டுகளாக இடிந்தது. அதனால், பக்தர்கள் அச்சமடைந்தனர். 

trichendur kovil

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிழாக்களின்போது காவடி, பால்குடம் ஆகிய நேர்த்திக்கடன்களைப் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வருவர். பக்தர்கள்,நிழலிலேயே கோயிலுக்கு நடந்து செல்லும் வகையில், சிவன்கோயில் முகப்பிலிருந்து தூண்டிகை விநாயகர் கோயில் வரை உள்ள சந்நிதி தெருவில், இருபுறமும் 20 அடி உயரமுள்ள 170 தூண்களுடன் அரை கி.மீ தூரம் வரை ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

trichendur kovil damaged pillar

இப்பகுதியில் மடங்கள், தனியார் மண்டபங்கள் ஆகியவை உள்ளன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், இந்தச் சந்நிதி தெரு வழியாகத்தான் கோயிலுக்கு நேர்த்திக்கடனை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற ஐதீகம் உள்ளதால், இப்பகுதியில் எப்போதும் பக்தர்களின் கூட்டம் காணப்படும்.

இந்நிலையில், தூண்டிகை விநாயகர் கோயில் அருகில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளுக்காக,  லாரியில் மணல் கொண்டு வரப்பட்டது. லாரியை டிரைவர் பின்னோக்கி இயக்கி திருப்ப முயற்சி செய்தபோது, எதிர்பாராத விதமாக லாரியின் இடப்புறம் உள்ள தூணில் மோதியது. அதனால், தூண் இரண்டாக உடைந்து நின்றது. கோயில் நிர்வாகத்தினரும் போலீஸாரும் இடிந்தத் தூணைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்பு அமைத்தனர். இருப்பினும், எந்த நேரத்தில் தூண் கீழே விழுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

trichendur kovil

கடந்த டிசம்பர் மாதம், வள்ளிக் குகைக்கு எதிரில் சுற்றுப்பிராகார மேற்கூரை இடிந்து விழுந்ததால் மோர் விற்றுக்கொண்டிருந்த பேச்சியம்மாள் என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் 2 பக்தர்கள் காயமடைந்தனர். இந்தச் சூழ்நிலையில், லாரி மோதி தூண் இடிந்தது பக்தர்களிடம் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்று. இந்த நாள்களில் தினமும் சப்பர பவனி, சிறப்புப் பூஜைகள் மற்றும் தேரோட்டம், தெப்ப  உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளதால், வரும் மார்ச் 3-ம் தேதி வரை பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருவதால், இடிந்த தூண் பக்தர்கள்மீது விழுந்து மேலும் ஒரு விபத்தை ஏற்படுத்துவதற்கு முன் கோயில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!